Show all

“வாழு..வாழ விடு!” என்ற தத்துவத்தை கர்நாடக அரசுக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம்

“வாழு..வாழ விடு!” என்ற தத்துவத்தின் அடிப்படையில் கர்நாடக அரசு தானும் வாழ்ந்து, தமிழக விவசாயிகளும் வாழும் வகையில் காவிரி நீரை திறந்துவிட முன்வர வேண்டும், என உச்ச நீதிமன்றம் அதிரடியாக வலியுறுத்தியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் ஆண்டுதோறும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்க மறுத்து வருகிறது. எனவே காவிரி நீரை உடனடியாக திறக்கக் கோரி தமிழக அரசு சார்பாக கடந்த 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன், வழக்கறிஞர் மோகன் கடார்கி ஆகியோர் பதில் மனுவை தாக்கல் செய்தனர். அதில், “கர்நாடகாவில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் காவிரியின் குறுக்கே உள்ள 4 அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. நீர்ப்பாசன பருவ ஆண்டின் ஆகஸ்ட் 19-ம் தேதி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளில் 180 டிஎம்சி நீர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 80 டிஎம்சி நீர்மட்டுமே இருப்பதால் தமிழகத்துக்கு 50.052 டிஎம்சி நீரை வழங்க இயலாது” என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு தொடர்ந்து மதிக்காமல் இருந்து வருகிறது.எனவே ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி, காவிரி நீரை பெற தமிழகம் போராடி வருகிறது. இந்த போக்கினால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாய குடும்பங்கள் வேதனையில் தவிக்கின்றனர்” என்றார். அதற்கு கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன், 'கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் காவிரியின் குறுக்கேயுள்ள 4 அணைகளில் போதிய நீர் இல்லை. தற்போது உள்ள நீரைத் தமிழகத்தின் பாசனத்துக்கு வழங்கினால் பெங்களூரு, மைசூரு உள்ள நகரங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் குடிநீருக்கே தவிக்க வேண்டியிருக்கும். மேலும் வறட்சிக் காலங்களில் நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவுக்கு மாற்று வழிமுறைகளை காவிரி நடுவர் மன்றம் வழங்கவில்லை” என்றார். இதை தொடர்ந்து நீதிபதி தீபக் மிஸ்ரா, “வாழு.. வாழ விடு!” என்ற தத்துவத்தின் அடிப்படையில் காவிரி விவகாரத்தை கர்நாடகா அணுக வேண்டும். தானும் வாழ்ந்து பிறரையும் வாழவிடுவது என்ற நோக்கத்தில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட முன்வர வேண்டும். இந்த விவகாரத்தை மனித நேயத்துடன் அணுகி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கத்திய எழுத்தாளர் சாமு வேல் டெய்லர் கோல்ரிட் கூறி யதைப் போல, “மருங்கெல்லாம் தண்ணீர் ஆகா! அருந்தவோ ஒன்றும் ஆகா!” என்ற துயரமான நிலையில் தமிழகம் இருக்கிறது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களாக நீர்ப்பற்றாக்குறையினால் தமிழக விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய சூழலில் கர்நாடக அரசு காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்கலாமா? காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் உரிமை, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். நதி நீர் பங்கீடு விவகாரத்தில் இரு மாநிலங்களும் அரசியலையும், பகை உணர்ச்சியையும் கலக்கக் கூடாது. அரசியலமைப்பு சட்டம் வழங்கிய மேன்மைமிக்க உணர்வின் அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும். அப்போது தான் இரு மாநில மக்களும் நட்புறவுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ முடியும். காவிரி நதி நீர் பகிர்வில் ஏற்படும் பிரச்சினைகளினால் இரு மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என்றார். அப்போது குறுக்கிட்ட கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன், “கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. இந்தச் சூழலில் தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறப்பது சிரமம்” என்றார். அதற்கு நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஆண்டுதோறும் எவ்வளவு மழை பெய்யும் என்பதை நீதிபதிகளால் அனுமானிக்க முடியாது. மிகை மழைப்பொழிவு காலம், வறட்சி காலம் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டு இருக்கும். எனவே வறட்சி காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை கர்நாடகா மதித்து நடக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கர்நாடகா இந்தத் தீர்ப்பை பின்பற்றாமல் இருக்க முடியாது. தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு அவசரமாக 25 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. இதில் எத்தனை டிஎம்சி நீரை கர்நாடகா உடனடியாக வழங்க முடியும் என்பதை வரும் திங்கள்கிழமை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி அணுகுமுறையால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. எனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா மற்றும் காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் நேற்று அவசரமாக டெல்லி சென்றனர். வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நரிமனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.