Show all

மதுரை மக்களை அசத்தும் மிதிவண்டி மருத்துவர்! சொகுசுந்தை விற்றதால், கிடைக்கிறது மாதம் ரூ5000 சேமிப்பு, உடல்நலம் என்கிறார்

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நரம்பியல்துறை சிறப்பு மருத்துவர் எஸ்.மீனாட்சிசுந்தரம் அகவை 49. இவர் கடந்த 4 ஆண்டுகளாக தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு மிதிவண்டியில் சென்று வருகிறார். 18 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் இருக்கும் இவர், தொடக்கத்தில்  மருத்துவமனைக்கு மற்ற மருத்துவர்களை போல் சொகுசுந்தில் தான் சென்று வந்துள்ளார். அதன்பிறகு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அருகில் உள்ள பூங்காவுக்கு நடைப் பயிற்சி செய்வதற்காக காரை பயன்படுத்தாமல் மிதிவண்டியில் செல்லத் தொடங்கினார்.

மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்பட்டதால், அன்றாடம் வீட்டிலிருந்து தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு தற்போது மிதிவண்டியில் சென்று வருகிறார். அருகே உள்ள கடைகளுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கச் செல்வது முதல், மின்மினி உணவகங்களில் நடக்கும் மருத்துவக் கருத்தரங்குக்கு செல்வது வரை அனைத்திற்கும் மிதிவண்டியைப் பயன்படுத்தி வருகிறார். 

மருத்துவர் மீனாட்சிசுந்தரம் அவர்கள் கூறியதாவது: 'நானும் தொடக்கத்;;தில் டவேரா சொகுசுந்தில்தான் மருத்து வமனைக்குச் சென்று வந்தேன். ஒருநாள் எனது நண்பர் மதுரையைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணர் கண்ணன்தான், மிதிவண்டி ஓட்டும்படி பரிந்துரைத்தார். மிதிவண்டி ஓட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும், குண்டாக இருக்கிறாய், எடையைக் குறைக்கும்படி அறிவுரை கூறி அவரே மிதிவண்டியையும் வாங்கித் தந்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மிதிவண்டி ஓட்டத் தொடங்கினேன். மிதிவண்டியை வெறுமனே உடற்பயிற்சிக்காக மட்டும் ஓட்டக்கூடாது. சொகுசுந்து வைத்திருந்தால் மிதிவண்டி ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வராது என்பதால் சொகுசுந்தை விற்று விட்டேன். அதன்பிறகு மிதிவண்டி ஓட்டத் தொடங்கியபின், சொகுசுந்து பயன்படுத்துவதே இல்லை. எங்கு போனாலும் மிதிவண்டியில்தான் செல்வேன்.

தொடக்கத்தில், நான் மிதிவண்டியில் செல்வதைப் பார்த்து சிரித்தவர்கள், தற்போது என்னை வியந்து பாராட்டுகிறார்கள். என்னைப் பார்த்து என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், எனது மருத்துவ நண்பர்கள் பலரும் தற்போது மிதிவண்டிக்கு மாறி விட்டனர். மிதிவண்டியில் சென்றால் நிதானமாக பரபரப்பு இல்லாமல் வேலைக்குச் செல்ல முடிகிறது. மிதிவண்டியில் சென்றால் தாமதமாகும் என்று சொல்வதில் துளிகூட உண்மையில்லை. தொலை தூரத்துக்கு செல்ல வேண்டுமென்றால் அது பொருந்தும். நகர் பகுதியில் மிதிவண்டிதான் சிறந்த வாகனம்.

உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஓட்டினால் சில நாட்கள் ஓட்டிவிட்டு பிறகு விட்டு விடுவோம். மிதிவண்டி நமது வாழ்க்கையோடு இணைய வேண்டும். என்னைப் பார்த்து எனது மகன்களும் பள்ளிக்கு மிதிவண்டியில் செல்லத் தொடங்கி விட்டனர். தொடக்கத்;தில் எனது மனைவிக்கு மிதிவண்டியில் செல்வது பிடிக்கவில்லை. பாதுகாப்பாக இருக்குமா, மற்றவர்கள் நையாண்டி செய்வார்களே என நினைத்து வருந்தினார். தற்போது எனது உடல் நலம் மேம்பட்டதை பார்த்து அவரே என்னை மிதிவண்டியில் செல்ல வழியனுப்பி வைக்கிறார்.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெனீஸ் அருகே லீடோன் என்ற குட்டித் தீவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த உணவகத்தில் இருந்து கருத்தரங்கு நடந்த இடத்துக்கு சொகுசுந்தில் செல்ல ஒரு முறைக்கு 8 யூரோ கொடுக்க வேண்டியிருந்தது. அதனால், மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்றேன்.

எனது நண்பர்கள், சொகுந்து வாடகை, சாப்பாடு உள்ளிட்ட மற்ற அனைத்துக்கும் ஒரு நாளைக்கு 30 யூரோ வரை செலவு செய்தார்கள். ஆனால், நான் அங்கு தங்கியிருந்த 6 நாட்களும் மிதிவண்டியைக் குறைந்த வாடகைக்கு எடுத்து மருத்துவக் கருத்தரங்குக்குச் சென்றேன். தீவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களையும் மிதிவண்டியில் எளிதாக சுற்றி பார்க்க முடிந்தது. சொகுசுந்து வாடகை பணமும் மிச்சமானது. மதுரையில் மிதிவண்டியில் செல்வதற்கு முன்பாக ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் வரை பெட்ரோலுக்கு செலவழித்தேன். தற்போது அந்தப் பணமும் சேமிப்பாகி விட்டது.' என்று மேலும் தெரிவித்தார் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.