Show all

கேஜ்ரிவால் மீது அன்னா ஹசாரே முழுமையாக நம்பிக்கை இழப்பு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டேன் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வேதனை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே போராட்டம் நடத்திய காலத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் தற்போதைய டெல்லி முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால். இந்தப் போராட்டங்களுக்குப் பிறகே ஆம் ஆத்மி என்ற அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் களத்தில் குதித்தார். ஊழலுக்கு எதிரானவராக முன்னிறுத்தியதால் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று டெல்லியின் முதல்வராக கேஜ்ரிவால் பதவியேற்றார். எனினும் 2-வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்ற நாள் முதலாக, அவரது அமைச்சர்கள் மீது வரிசையாக மோசடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் குடும்ப அட்டை பெறுவதற்காக உதவி கேட்டு வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்மணியை முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான சிடி ஆதாரங்கள் அண்மையில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் சமூக ஆர்வலரான அண்ணா ஹசாரே ஆம் ஆத்மி கட்சியின் போக்கு குறித்து கவலை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கேஜ்ரிவால் என்னுடன் இருக்கும்போது கிராம ஸ்வராஜ் என்ற புத்தகத்தை எழுதினார். ஆனால் தற்போதைய சூழலில் அவர் நடந்து கொள்ளும் விதம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரா அந்தப் புத்தகத்தை எழுதினார் என்ற சந்தேகம் தான் எழுகிறது. அவர் மீது நான் கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளும் முழுமையாக பொசுங்கிவிட்டன. அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் மோசடியில் ஈடுபடுவதும், சிறைக்குச் செல்வதுமாக உள்ளனர். இந்தப் போக்கு எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.