Show all

பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை

சென்னை கோடம்பாக்கத்தில், நேற்று பட்டப்பகலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் வசித்து வந்தவர் முருகன்(வயது 44). சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞராகச் செயல்பட்டு வந்தார். இவருக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும், 8-ம் வகுப்பு படிக்கும் மகனும், 3-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

முருகன் குடிபெயர்வதற்காக வாடகை வீடுகளைப் பார்த்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6-வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாடகைக்கு இருப்பது முருகனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த வீட்டை பார்ப்பதற்காக நேற்று மதியம் 1 மணியளவில் தனது கார் மூலம் கோடம்பாக்கம் பகுதிக்கு வந்தார். காரை அவரே ஓட்டி வந்தார்.

காரை அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அவரை 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அரிவாளால் வெட்ட முயற்சித்தது. சுதாரித்துக்கொண்ட முருகன் உயிர் பிழைப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்தக் கும்பல் முருகனைச் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். கத்தியாலும் அவரது வயிற்றில் குத்தினர். இதில் ரத்த வௌ;ளத்தில் முருகன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோடம்பாக்கம் துணை ஆணையர் அபினவ் குமார், உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்பட காவல்துறை  உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வௌ;ளத்தில் பிணமாக கிடந்த முருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர் சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் சி.சி.டி.வி. கண்காணிப்பு படக்கருவி பொருத்தப்படவில்லை. அருகில் உள்ள வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு படக்கருவி காட்சிகளை காவல்துறையினர் பார்த்தனர். ஆனால் அதில் கொலையாளிகள் உருவப்படம் தெளிவாக பதிவாகவில்லை.

இந்தநிலையில் முருகன் படுகொலை குறித்து அவருடைய மைத்துனர் லோகேஸ் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

குடும்ப தகராறு, முன் பகை காரணமாக முருகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

கொலையாளிகளைப் பிடிப்பதற்காக உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 2 ஆய்வாளர்கள் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

படுகொலை செய்யப்பட்ட முருகன் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். எந்த பிரச்சினைக்கும் போக மாட்டார். மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’, ‘மனிதன்’ ஆகிய படங்களுக்கு வரி விலக்கு கேட்ட வழக்கில் இவர் தான் ஆஜரானார். சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படம் தொடர்பான வழக்கிலும் ஒரு தரப்பினருக்கு ஆஜரானார். மேலும் திரையுலக பிரமுகர்களுக்கு வக்கீலாகவும், நண்பராகவும் இருந்து வந்தார் என்று அவருடன் பணியாற்றிய சக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆள்மாறாட்டத்தால் முருகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.