Show all

தமிழகச் சட்டசபை தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு

தமிழகச் சட்டசபை தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டு உள்ளது.

 

     தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியர் ச.ராஜநாயகம் தலைமையில் ‘மக்கள் ஆய்வு’ குழுவினர் கடந்த 7-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள 120 சட்டமன்ற தொகுதிகளில் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டனர்.

 

5 ஆயிரத்து 464 பேரிடம் தற்போதைய அரசியல் சூழல், சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பு தொடர்பான முடிவுகளை பேராசிரியர் ச.ராஜநாயகம் மற்றும் ‘மக்கள் ஆய்வு’ குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று வெளியிட்டனர்.

 

     2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் செயல்திறன் நன்றாக இருந்ததாக 55.2 சதவீதம் பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டில் 33 சதவீதம் பேரே திருப்தி தெரிவித்துள்ளனர்.

 

யார் தலைமையில் ஆட்சி அமையும் என்ற யூகத்துக்கு தி.மு.க. அணிக்கு 37.7 சதவீதம் பேரும், அ.தி.மு.க. அணிக்கு 35.7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்கள் நல கூட்டணிக்கு 5.4 சதவீதம் பேரும், பா.ம.க. அணிக்கு 2.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

 

     தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இன்று வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வாக்களிப்போம் என்று 33.3 விழுக்காடு பேர் கூறியுள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என்று 33.1 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

 

தே.மு.தி.க.வுக்கு 6 விழுக்காடு பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பா.ம.க.வுக்கு 3.2 விழுக்காடு;, பா.ஜ.க.வுக்கு 2 விழுக்காடு பேர், காங்கிரசுக்கு 1.8 விழுக்காடு;, ம.தி.மு.க.வுக்கு 1.5 விழுக்காடு;, இடது சாரிகளுக்கு 1.2 விழுக்காடு;, விடுதலை சிறுத்தைகளுக்கு 1.2 விழுக்காடு;, தமிழ் மாநில காங்கிரசுக்கு 0.4 விழுக்காடு;, முஸ்லிம் லீக், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு தலா 0.3 விழுக்காடு பேர் ஆதரவளித்துள்ளனர்.

 

     சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 0.2 விழுக்காடு பேர் ஆதரவு கிடைத்துள்ளது. எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் (நோட்டா) என்று 3.3 விழுக்காடு பேர் கூறினார்கள். தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி என்ற அந்தஸ்தில் அ.தி.மு.க. முதல் இடத்தில் இருப்பது இந்த கருத்து கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

நமக்கு நாமே பயணத்தால் மக்கள் மத்தியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு பெருகியுள்ளது என்று 38 விழுக்காடு பேரும், தி.மு.க.வில் அவருக்குள்ள முன்னுரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக 30 விழுக்காடு பேரும் தெரிவித்துள்ளனர்.

 

தமிழகத்தில் மக்களுக்கு பிடித்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்விக்கு 46.5 விழுக்காடு பேர் காமராஜரை சுட்டிக்காட்டியுள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக எம்.ஜி.ஆருக்கு 27.9 விழுக்காடு பேரும், கருணாநிதிக்கு 8.7 விழுக்காடு பேரும், அண்ணாவுக்கு 7.1 விழுக்காடு பேரும், ஜெயலலிதாவுக்கு 4.4 விழுக்காடு; பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

அ.தி.மு.க.வை கடந்த 2014 நவம்பர் மாதத்தில் 43 விழுக்காடு பேர் ஆதரித்ததாகவும், தற்போது இது (ஜனவரி 2016) 33.3 விழுக்காடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 2014-ல் 26 விழுக்காடு இருந்தது, தற்போது 33.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.

 

 

     அ.தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தி வரும் நலத்திட்டங்களில் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் திட்டத்துக்கு 23.6 விழுக்காடு பேரும், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டத்துக்கு 21.1 விழுக்காடு பேரும், திருமண உதவித்தொகை திட்டத்துக்கு 14.5 விழுக்காடு  பேரும், விலையில்லா கால்நடை திட்டத்துக்கு 10.2 விழுக்காடு பேரும், முதியோர் உதவித்தொகை திட்டத்துக்கு 8.3 விழுக்காடு பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.