Show all

ஆணவக் கொலையால் பாதிக்கப் பட்ட கௌசல்யா கோவையில் மறுமணம்

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தையே உலுக்கிய அந்த ஆணவக் கொலை நடந்து ஒரு ஆண்டு  கடந்துவிட்ட நிலையிலும்  தற்;போது ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்புமான இடைப் பட்ட காலத்தில் கௌசல்யா:

எவ்வளவோ சவால்களை சந்திச்சு நானும் சங்கர் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தோம். நான் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். சங்கர் கல்லூரிக்குப் போயிட்டு இருந்தான். காதலிச்ச நாட்களை விட ரொம்ப மகிழ்ச்சிய போனது வாழ்க்கை. எங்கள வாழவைச்சுக் காட்டுற மாதிரி, வளாக நேர்காணலில் சங்கருக்கு வேலைகூட கிடைச்சிருந்தது. இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்னு ரெண்டு பேரும் நம்பிக்கையோட இருந்தோம். அந்த நாட்களோட மகிழ்ச்சியைச் சொல்லத் தெரியல... ஆசைப்பட்ட வாழ்க்கையை பொருள்பொதிந்ததாக்கப் போற திருப்தி அது.

கௌசல்யாகல்லூரி ஆண்டு விழாவுக்காக சங்கருக்கு ஒரு சட்டை வாங்க கடைக்குப் போனோம். கடையில இருந்து வெளியே வந்தப்போ.... இப்போ நினைச்சாலும் மனசும் உடம்பும் நடுங்குது. என் கண் முன்னாடியே சங்கரை துள்ளத் துடிக்க வெட்டினாங்க.. பேச்சுத் தடுமாற, எச்சில் விழுங்கி சமாளித்துத் தொடர்ந்தார்.

சங்கரை காப்பாத்தப்போன என்னையும் தலையில வெட்டுனாங்க. நான், காப்பாத்துங்க காப்பாதுங்கனு அழுதப்போ, சாலையிலே நின்னுட்டு இருந்தவங்க எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்தாங்க. அவங்க உயிர் பயம் அவங்களுக்குன்னாலும், ஆளுக்கொரு கல்லை எடுத்தாவது வீசியிருக்கலாம். மொத்தத்துல, எந்தத் தடையும் இல்லாம எங்க ரெண்டு பேரையும் ரத்தச் சகதியில வீசிட்டு, சாவகாசமா கிளம்பினது அந்தக் கும்பல். சங்கருக்கு உயிர்போக, நான் தலையில் பலத்த காயத்தோட உயிர் பிழைக்கனு... அடுத்து நடந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே.

சிகிச்சைக்குப் பிறகு நான் சங்கர் வீட்டில் தங்கியிருந்தேன். சங்கரோடு எல்லாமே முடிஞ்சிட்டதா இருந்த எனக்கு, அந்த நேரத்தில் என்னைப் பார்க்க வந்தவங்க எல்லாம் கொடுத்த ஆறுதலும் தன்னம்பிக்கையும்தான் என்னை மெல்ல அந்தச் சூழல்ல இருந்து வெளியே கொண்டுவந்தது. குறிப்பா, எவிடன்ஸ் கதிர், கார்த்தி, கோயம்புத்தூர், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், இளங்கோவன் அண்ணன், கீதா அக்கா, முத்தமிழ் அக்கா உள்ளிட்ட பலர் எனக்கு மனபலம் தந்தாங்க, பண உதவி செஞ்சாங்க, ஆலோசனை கொடுத்தாங்க. பனிரெண்டாம் வகுப்பு முடிச்சிருந்த என்னை தட்டச்சு முடிக்கவெச்சு, அரசுப் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. கீதா இளங்கோவன் அக்கா மடிக்கணினி வாங்கித் தந்தாங்க.

இப்போ இடைநிலை உதவியாளரா ஒரு அரசு வேலையில் சேர்ந்திருக்கேன். 15 ஆயிரம் சம்பளம் வாங்குறேன். மாதம் ஒரு முறை சங்கர் வீட்டுக்குப் போவேன். சங்கர் தம்பிகள் விக்கி, குட்டிக்கு  என்னால முடிஞ்ச பண உதவி செய்வேன். ரெண்டு பேரும் தினமும் எங்கிட்ட பேசியில பேசிடுவாங்க. சங்கரோட அப்பாவும், சாப்பிட்டியாம்மானு பேசியில் பேசுவார். இவங்கதான் என் குடும்பம். சில விடுமுறை நாட்களில் கீதா இளங்கோவன் வீட்டுக்குப் போவேன். எவிடன்ஸ் கதிர், கார்த்தி, முத்தமிழ் அக்கானு எல்லோரும் கூடப் பிறந்தவங்க மாதிரி என்னை வழிநடத்திட்டு வர்றாங்க. இப்போ அஞ்சல் வழியில் இ.அறி தகவல் தொழில் நுட்பம் படிச்சிட்டு இருக்கேன். சமூக சேவை முதுவர் முடிச்சிட்டு சமூக சேவையாளராகணும்.

நானே சம்பாதிச்சு, சமைச்சு, சாப்பிட்டுனு தனிமை கொல்லுற ஒரு வாழ்க்கை. எந்த ஊருல இருக்கேன்னு இப்பவும் சொல்ல பயமாதான் இருக்கு. ஏதோ பதுங்கு குழியில வாழுற மாதிரி வாழ்ந்துட்டு இருக்கேன். அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்? மனசுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு குத்தமா? கொலை செஞ்சவங்க, கொள்ளையடிக்கிறவங்க எல்லாம் தைரியமா, சுதந்திரமா, சந்தோஷமா வாழுற இந்த சமுதாயத்துல, சங்கருக்கும் எனக்கும் மட்டும் ஏன் இந்த தண்டனை? யாராச்சும் என்னைக் கண்டுபிடிச்சு இங்க வந்துருவாங்களா, ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்துருமானு மனசு இன்னும் தவிச்சுட்டேதான் இருக்கு. நிம்மதியா தூங்கக்கூட முடியல 

அம்மாவோட அம்மா, சொந்தக்காரங்ககிட்ட இருந்தெல்லாம் இன்னும் பேசி வந்துட்டேதான் இருக்கு. என்னை இந்த நிலைக்கு ஆளாக்குனதுக்கு அப்புறமும் எந்த முகத்தை வெச்சுட்டு அவங்களால எங்கிட்ட பேச முடியுதுனு தெரியல. சிலர் என்கிட்ட, பெத்தவங்கள வெறுக்காத, அவங்கக்கிட்ட பேசுனு எல்லாம் அறிவுரை சொல்வாங்க. அவங்களுக்கு நான் எந்த பதிலும் சொல்றதில்ல. மனசுக்குள்ள குமுறினாலும் ஒரு காதுல வாங்கி மறு காதுல விட்டிருவேன் என்றவர், தன் எதிர்காலம் எதற்கானதாக இருக்க வேண்டும் என்கிற தெளிவுடனும் தீர்க்கத்துடனும் இருக்கிறார்.

நான் கடைசி வரைக்கும் ஆணவக் கொலைக்கு வாழும் சாட்சியா இருந்து, சம்பந்தப்பட்டவங்க மனசாட்சியை உறுத்திட்டே இருப்பேன். என்னை இப்படி நிர்கதியா நிறுத்தினது சாதிதான். அந்த சாதி ஒழியணும். அதுக்காகப் போராடுறவங்களோட சேர்ந்து போராடுவேன்.

இவ்வாறாக சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு காதல் கணவரை இழந்த கௌசல்யா கோவையில் இன்று திராவிட அமைப்புகளின் திருமண முறைப்படி மறுமணம் செய்து கொண்டார்.

இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் நெருங்கிய நண்பர்கள் நடுவே அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. கௌசல்யா, நிமிர்பு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தியை திருமணம் செய்து கொண்டார். 

இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், வன்னி அரசு மற்றும் பத்திரிகையாளர் எவிடனஸ் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,996.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.