Show all

கஜா புயல் பாதிப்பு நிதி ரூ.13 ஆயிரம் கோடி கேட்க! முதல்வர் பழனிசாமி, மோடியைச் சந்திக்க, இன்று டெல்லி பயணம்

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் தமிழகத்தை தாக்கியதில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன. சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன. குறிப்பாக, நெல், தென்னை, வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.

திங்கட் கிழமை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 'கஜா' புயல் பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது

இந்தப் பட்டியலுடன் இன்று மாலை 5.20 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்படுகிறார். சென்னையில் இருந்து விமானத்தில் செல்லும் அவர் இரவு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, 'கஜா' புயல் பாதிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் அவர், சேதம் பற்றிய இடைக்கால அறிக்கையையும் நரேந்திர மோடியிடம் வழங்குகிறார். மேலும், நடுவண் அரசு வழங்கும் நிவாரண நிதியை விரைவாக விடுவிக்கவும், அதற்கு தகுந்த வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நடுவண் அரசு ஒரு குழுவையும் உடனடியாக அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறார். சந்திப்பின்போது 13,000 கோடி ரூபாய் அளவுக்கு புயல் நிவாரண நிதியை மோடியிடம் முதலமைச்சர் கோரவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,978.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.