Show all

தொழில் முனைவோரை உருவாக்கும் ‘எழுக இந்தியா’ திட்டம்

நாட்டில் புதிதாக இரண்டரை லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் ‘எழுக இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தில்லி அருகேயுள்ள நொய்டாவில், செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

தலித் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த தினத்தையொட்டி இத்திட்டம் தொடக்கப்பட்டது. முன்னதாக கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது ‘எழுக இந்தியா’ திட்டம் குறித்து மோடி முதல் முறையாக அறிவித்தார்.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், உள்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘எழுக இந்தியா’ திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர் தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘எழுக இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

நாடு முழுவதிலுமாக இரண்டரை லட்சம் தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நிறுவனங்களைத் தொடக்குவதற்கு

ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும்.

ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் வங்கிக் கிளைகள் மூலம் இக்கடனுதவியை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோருக்கு எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. எனவேதான் தொழில் நடத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இன்று வேலை தேடுபவர்களாக இருப்பவர்கள், நாளை பலருக்கு வேலைவாய்ப்பு அளிப்பவர்களாக உருவெடுப்பர்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் இத்திட்டம் பெரிய மாற்றத்தை உருவாக்க இருக்கிறது. ஒவ்வோர் இந்தியரும் தங்கள் சொந்தக் காலில் நிற்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில்தான் இத்திட்டத்துக்கு எழுக இந்தியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.