Show all

ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை கேக் வெட்டியும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

 

வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில்  ஜெயலலிதாவின் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு 1500 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் திரைப்பட நடிகர் வையாபுரி முன்னிலையில் அதிமுகவினர் அந்தக் கேக்கை வெட்டி கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் கேக்கை பறிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் அதிமுகவினர் தங்க தேர் இழுத்து  சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் தங்கதேர், சுவாமி சன்னதியில் இருந்து கோயில் உட்பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் சன்னதி வந்தடைந்தது. அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் வெற்றிப்பெற்று தமிழக முதல்வராக வரவேண்டும் என சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

 

நெல்லை சந்திப்பு பழையபேருந்து நிலையம் அருகே நள்ளிரவு 12 மணி அளவில் அதிமுகவினர் 68 கிலோ கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

கரூரில்  ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் முன்பு 68 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும்  கரூர் ஸ்ரீமாரியம்மன் கோவில், தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில்,ஸ்ரீவேம்பு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள  680 ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 

தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு, 68 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை, அதிமுக நிர்வாகிகள் வாண வேடிக்கையுடன் கொண்டாடினர். மேலும் பல்வேறு கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளுக்கும் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு, 68 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.மேலும் மாவட்ட முழுவதும் பல்வேறு கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் பாடல்களுக்கு  கலைஞர்கள் ஆடிய நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

சேலத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை விழாவை முன்னிட்டு இரவு 12 மணிக்கு கேக் வெட்டிய அதிமுகவினர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில், முதலமைச்சரை வாழ்த்திஅவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும்  இடைவிடாமல் பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகளை வெடித்து அதிமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.