Show all

நன்றாகவே தெரிந்திருக்கிறது திருச்சி மக்களுக்கு! திருச்சி ஏர்இந்தியா விமானம் மோதியது ஏன்

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓடுபாதை விரிவாக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இதெல்லாம் செய்யாததே திருச்சி ஏர்இந்தியா விமானம் மோதியதற்கான காரணம் என்று திருச்சியில் யாரைக் கேட்டாலும் தெளிவாக சொல்கிறார்கள்.

விமானங்களை மட்டும் அதிகரித்தால் போதுமா? ஓடுபாதை விரிவாக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இதெல்லாம் வேண்டாமா? இது பத்து பதினைந்து ஆண்டுகளாக திருச்சிவாழ் மக்களின் கேள்வி. முன்னாடியே எச்சரித்தும்கூட மெத்தனமான இருந்ததால்தான் இப்படி விமான நிலைய விபத்து ஏற்பட்டதாக திருச்சி மக்கள் குமுறுகிறார்கள். 

கடந்த வெள்ளியன்று துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விரைவு விமானம் ஓடுபாதையில் இருந்து எழும்பி மேலே பறக்க முயன்றபோது அருகில் இருந்த சுற்றுச்சுவரையும் இடித்து தள்ளி விட்டு பறந்தது. ஆனாலும் இதில் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக டெல்லியிலிருந்து அதிகாரிகள் வந்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். 

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய விமான நிலையம் திருச்சி விமான நிலையம்தான். மிகவும் பழமையான விமான நிலையமும் கூட. இரண்டாவது உலகப்போர் நடந்த சமயத்தில், போர் விமானங்களை நிறுத்துவதற்கும், அவற்றிற்கு எரிபொருள் நிரப்புவதற்கும் இந்த ராணுவ விமான தளம்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் நாம் விடுதலை பெற்ற பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்காக இந்த விமான நிலையம் மாற்றப்பட்டது. அன்றிலிருந்து இப்போதுவரை ஆண்டுதோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தும், இதன்மூலம் வருவாயும் அதிகரித்தும் வருகிறது. சிறப்பு வாய்ந்த இந்த விமான நிலையத்தில் விபத்து என்பதை திருச்சி மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

ஒரு விமான நிலையத்தின் உயிர்நாடியே அதன் ஓடுபாதை தான், அப்படி இருக்கும்போது அதை சரிப்படுத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளையெல்லாம் செய்ய வேண்டாமா என்று அவர்கள் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 

அப்துல் கலாம் குடிஅரசு தலைவராக இருந்த போது கடந்த பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு போயிங் 737 ரக விமானத்தில் திருச்சிக்கு வந்தார். அந்த விமானம் திருச்சியில் இருந்து புறப்பட்ட போது மிகவும் சிரமப்பட்டு தான் மேலே எழும்பி பறந்து இருக்கிறது. அப்போது அந்த விமானத்தை இயக்கிய ராணுவ விமானி டெல்லி சென்றதும் முதல் வேலையாக திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை நீட்டிப்பு செய்ய வேண்டியது மிக அத்தியாவசியமான ஒன்று. இல்லையேல் அது எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையை விமான நிலைய ஆணைய குழுமத்திடம் பதிவு செய்திருக்கிறார். ஆனாலும் தற்போது வரை அது நிறைவேற்றப்படவே இல்லை. அது மட்டுமல்லாமல், இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையின் தற்போதைய நீளம் 8,136 அடிகள் ஆகும். இதனை 12 ஆயிரத்து 500 அடியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது பல ஆண்டு திட்டமாகும். ஆனால் பல்வேறு முட்டுக்கட்டைகளால் இது நிறைவேற்றவே முடியவில்லை என கூறப்படுகிறது. ஓடுபாதையின் நீளத்தை நீட்டிப்பு செய்து இருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது என்பது மக்களின் பொதுவான கணிப்பு. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடி ஏற்படாமல் இருக்கும் வகையில் மத்திய குழு அதிகாரிகளின் விசாரணை அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,942.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.