Show all

தெளிவாக அடையாளப் படுத்துகிறதா அரசு? பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பாதிக்கப் பட்டவர்களை அசிங்கப் படுத்தி அச்சுறுத்தும் நோக்கமா

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள அரசாணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடாபான வழக்கு நடுவண் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட ஆணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இடம் பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பெயரை வெளிப்படையாக கூறினார். பின்னர் அது தவறுதலாக நடைபெற்றுவிட்டதாக மலுப்பப்பட்டது. 

பாலியல் தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர், அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படக் கூடாது என்ற உச்சஅறங்கூற்றுமன்றத்தின் உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் காவல் அதிகாரியின் செயல்பாட்டுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. 

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றம் செய்வதாக தமிழக அரசு ஆணை பிற்ப்பித்துள்ளது. ஆனால், அந்த ஆணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், மாணவி பயிலும் கல்லூரியின் பெயர், மாணவியின் சகோதரர் பெயர் என முழு விவரமும் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் அனைத்துத் தரப்பிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு அதிகாரி இதழியலாளர்களிடம் பாதிக்கப்பட்ட நபரின் பெயரை குறிப்பிட்டதே பெரும் சர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணையிலேயே எழுத்து வடிவில் பாதிக்கப்பட்டவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் இத்தகைய மெத்தனப்போக்கான செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப்பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

'பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சஅறங் கூற்றுமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு! இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா? குற்றவாளிகளைக் காப்பாற்ற தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம்' என்று ஸ்டாலினும்,

'பொள்ளாச்சி நடுவண்குற்றப்புலனாய்வு விசாரணைக்கான அரசாணையில் மாணவியின் பெயரைச் சேர்த்து பாதிக்கப்பட்டோரை மிரட்டும் பழனிச்சாமி அரசுக்கு கண்டனம்! என்று தினகரனும் கண்டனங்களைப் பதிவிட்டிருக்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.