Show all

தீபாவளியையொட்டி சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை இந்தஆண்டு ரூ.100கோடி.

தீபாவளியை யொட்டி சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை இந்தஆண்டு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.

வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பட்டாசுத் தொழிலுக்குப் புகழ் பெற்ற சிவகாசியில் தற்போது பட்டாசு விற்பனைத் தீவிரமடைந்துள்ளது.

தீபாவளிக்காக புதுப்புது ரகங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

இதைத்தொடர்ந்து வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் கார்களிலும், பைக்குகளிலும், லாரிகளிலும் வருவதால் சிவகாசியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது.

இங்கு மொத்த மற்றும் சில்லறை விற்பனையைத் தவிர கடந்த 3 ஆண்டுகளாக “ஆன்-லைன்” மூலமாகவும் பட்டாசு விற்பனை நடந்து வருகிறது.

பிரபல பட்டாசு நிறுவனங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்களும் ஆன்-லைனில் பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றன.

இதனால் கடந்த 2 ஆண்டுகளைவிட சிவகாசியில் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் கண்ணன்,

கடந்த 2 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு ஆன்-லைன் மூலமாக பட்டாசு விற்பனை அதிகரித்து உள்ளது. பிரபல நிறுவனங்களுக்கு ஈடாக ஏராளமான சிறிய நிறுவனங்களும் ஆன்-லைன் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

இதனால் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் பட்டாசு விற்பனை ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. ஆன்-லைன் மூலம் பட்டாசு வாங்கும் பழக்கம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாகும்.

பிரபல நிறுவனங்கள் தரமான பட்டாசுகளை விற்பனை செய்கின்றன. ஆனால் வண்ணமயமான விளம்பரங்களுடன் சில போலி பட்டாசு நிறுவனங்களும் ஆன்-லைன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. பலவிதமான பட்டாசு ரகங்களை வெப்சைட்டில் வெளியிட்டு அதற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கொடுப்பதாகவும் விளம்பரம் செய்கின்றன. பொதுமக்கள் ஆர்வக்கோளாறில் பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்து அது தரமில்லாததால் ஏமாறுவதும் உண்டு. ஆனால் தான் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர் யாரும் வெளியில் கூறுவது இல்லை.

இதனால் போலி பட்டாசு நிறுவனங்கள் ஆன்-லைனில் பட்டாசு விற்பனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.