Show all

ஆசிரியர் எனில், ஆசு-இரியர் குற்றம்-இல்லாதவர் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பொருத்தமாக

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அலட்சியமாகத்தான் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் அரசு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் கடமைகளைக் கடந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கரை கொண்டு செயல்பட்டு மாணவர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பதற்கு கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சம்பவமே எடுத்துக்காட்டு. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை விலங்கியல் ஆசிரியராக கடந்த 2012 ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தவர் ரவிச்சந்திரன்.அவர் பணியில் சேர்ந்த பின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கரையோடு செயல்பட்டதோடு அப்பள்ளியில் படித்த 7 மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கவும் ரவிச்சந்திரன் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது தான் தெரிந்தது அவரது கல்லீரல் செயல் இழந்துவிட்டது என்று. அவரை குணப்படுத்த 90 லட்சம் வரையில் செலவாகும் என மருத்துவர்கள் கூற அந்த அளவிற்கு பொருளாதார வசதியின்றி வாழும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்தத் தகவல் அறிந்த கொத்தமங்கலம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். ஆசிரியர் எனில், ஆசு-இரியர் குற்றம்-இல்லாதவர் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பொருத்தமாக இருந்து தற்போது உயிருக்காக போராடி வரும் ஆசிரியரின் உயிரைக் காக்க தமிழக முதல்வர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வருக்கு 400 மாணவர்கள் கண்ணீரோடு மடல் எழுதியதோடு அவர் உயிர் பிழைத்து உடல் நலத்தோடு மீண்டு மீண்டும் பள்ளிக்கு வரவேண்டும் என்று மாணவர்கள் ஒன்று கூடி ஆண்டவனை வேண்டிக் கொண்ட நிகழ்வு காண்போரையும் நெகிழ செய்தது. இதனைக் கண்ட தமிழக அரசு ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முன்வந்தது. இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள ஆசிரியர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியரின் உயிர் காக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் மற்றும் அமைச்சர், பத்திரிக்கைகளுக்கு மாணவர்கள் நன்றி கூறினார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.