Show all

பலவித வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள சேத்துப்பட்டு ஏரி

சென்னையின் மற்றொரு சுற்றுலா அடையாளமாக பலவித வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள சேத்துப்பட்டு ஏரியை நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

 

சென்னையின் மத்தியப் பகுதியான சேத்துப்பட்டில், 16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள மீன்வளத் துறைக்குச் சொந்தமான ஏரி புனரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமாக மாற்றப்படும் என முதல்வர் பேரவையில் அறிவித்தார். இதன்படி மேம்படுத்தப்பட்ட சேத்துப்பட்டு ஏரியை முதல்வர் நேற்று  திறந்துவைத்தார்.

 

பசுமைப் பூங்காவில், மக்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணவும், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மீன்பிடிப்பு, படகுச்சவாரி, ஊடக மையம், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, பூக்களின் மகரந்த சேர்க்கைக்கென வண்ணத்துப் பூச்சிகளைக் கவர்ந்திட மகரந்தப் பூங்கா ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்தப் பூங்காவில் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும், பூங்கா பசுமையுடன் விளங்கும் வகையிலும் ஏரியின் கரையோரங்களில் நூற்றுக்கணக்கான அழகிய செடிகள், அரியவகை மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

 

பூங்காவில் உள்ள ஏரி மழைநீரைத் தேக்கும் திறன் கொண்டதாக புனரமைக்கப்பட்டதால் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும்.

 

 

ஏரியில் உள்ள நாட்டுவகை மீன் இனங்களுடன், இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு, மிர்கால், பங்கேசியஸ் மீன் இனங்கள் விடப்பட்டுள்ளன. பசுமை பூங்காவின் இயற்கை சூழலால் பூங்காவுக்கு வருகை புரியும் அரிய வகைப் பறவைகளின் வரத்து அதிகரிக்கும்.

 

மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், பூங்காவில் முதல்முறையாக படகுசவாரி வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தூண்டில் மீன்பிடிப்பில் நாட்டம் உள்ளவர்களுக்காக உயர்ரக தொழில்நுட்ப தூண்டில் வசதியும், புதிதாக பயில்பவர்களுக்கு பயிற்சியாளர்கள் கொண்ட தூண்டில் மீன்பிடிப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 

நீர்வாழ் உயிரின சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏரியைச் சுற்றி சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

 

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு தரமான உணவினை வழங்கும் வகையில் சுகாதாரமான உணவகம் அமைக்கப்படும். பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தத்தில், 66 நான்கு சக்கர வாகனங்களையும், 100 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சேத்துப்பட்டு ஏரியில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 3 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.