Show all

கிடைத்தது விடை! என்னப்பா.. லலிதா நகையக கொள்ளைச் செய்தியா? சத்தமில்லமா சுவரை எப்படி உடைச்சாங்க தெரிஞ்சுதா?

லலிதா நகையக கொள்ளைச் செய்தியை கேள்வியுறுகிற ஒவ்வொருவருக்கும் எழுகிற ஒரே கேள்வி! சத்தம் இல்லாமல் சுவரை உடைத்தது எப்படி? லலிதா நகையக கொள்ளையன் வெளியிட்டான் அந்த பரபரப்புத் தகவலை.

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: லலிதா நகையக கொள்ளைச் செய்தியைக் கேள்வியுறுகிற ஒவ்வொருவருக்கும், சத்தம் இல்லாமல் சுவரை உடைத்தது எப்படி? என்ற கேள்வி எழுந்து ஐயம் தீர்த்து வைக்கப் படாமலே இருந்து வந்த நிலையில், திருச்சி லலிதா நகையக கொள்ளையில் சுவர் இடிக்கப்பட்டது எப்படி, அங்கு இருந்த பாதுகாவலர்கள் ஏமாற்றப்பட்டது எப்படி என்று கொள்ளையன் மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்தக் கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டு முருகன் என்ற கொள்ளையனின் தலைமையிலான குழு அரங்கேற்றி உள்ளது . இதில் இதுவரை மணிகண்டன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் உட்பட 17 பேரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் முதன்மையாக அந்தக் கடையில் நான்கு பாதுகாவலர்கள் இருந்தும் எப்படி கொள்ளை நடந்தது என்று விளக்கி உள்ளனர். 

மொத்தமாக நகையகத்தில் நான்கு பாதுகாவலர்கள் இருந்துள்ளனர். அருகே இருந்த பள்ளியில் ஒரு பாதுகாவலர் இருந்துள்ளார். அதேபோல் நான்கு பாதுகாவலர்களும் தூங்காமல் இருந்துள்ளனர். இதுவும் கண்காணிப்பு படக்கருவி மூலம் உறுதியாகி உள்ளது. ஆனால் இதை எல்லாம் மீறித்தான் இந்தக் கொள்ளை நடந்து இருக்கிறது. கொள்ளை நடந்த அன்று மழை காரணமாக சுவர் ஈரமாக இருந்துள்ளது. இதனால் சுவரை இடிக்காமல், மிக மிக மெதுவாக சில துளைகள் இட்டு, அந்த துளைகள் வழியாக, மெதுவாக இரும்பை அறுக்கும் இரம்பக் கத்தி வைத்து அறுத்து இருக்கிறார்கள். 

சுமார் 2.30 மணி நேரம் சுவற்றில் துளையிட்டு இருக்கிறார்கள். சுவருக்கு ஒரு பக்கம் பாதுகாவலர் இருந்துள்ளார். ஆனால் அவருக்கே சத்தம் கேட்காத வகையில் இந்த வேலையை செய்துள்ளனர். இரண்டு பேர் சேர்ந்து 2.30 மணி நேரம் பொறுமையாக அறுத்து கற்களை எடுத்துள்ளனர். இதனால்தான் அவர்கள் சுவரில் துளையிட்ட போது அது யாருக்கும் கேட்கவில்லை என்று வாக்குமூலம் மூலமாக தெரிய வந்துள்ளது. கண்டிப்பாக இதற்கு அவர்கள் இது தொடர்பாக கடுமையாக பயிற்சி எடுத்து இருப்பார்கள். பயிற்சி இல்லாமல் இப்படி சத்தமே இல்லாமல் சுவரை உடைக்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,299.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.