Show all

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்: சரத்குமார்

 

     சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் தரும் கூட்டணியில் இடம்பெறுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.

 

மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு என்ற பெயரில் கொங்கு மண்டலத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நான்கு நாள் சுற்றுப் பயணத்தை ஈரோட்டில் வௌ;ளிக்கிழமை தொடங்கினார். ஈரோடு, மேட்டுக்கடைக்கு வந்த சரத்குமாருக்கு கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் சின்னசாமி, தெற்கு மாவட்டச் செயலாளர் சீனிவாசன், மேற்கு மாவட்டச் செயலாளர் ஐசக் சிவகுமார் ஆகியோர் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

 

மேட்டுக்கடையில் இருந்து மாமரத்துப்பாளையம், கனிராவுத்தர்குளம், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம், கருங்கல்பாளையம், மரப்பாலம், பன்னீர்செல்வம் பார்க், சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சரத்குமார் சந்தித்தார். தொடர்ந்து, தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மூலப்பாளையம், சோலார், மொடக்குறிச்சி, அறச்சலூர், சென்னிமலை வழியாக பெருந்துறையில் சுற்றுப் பயணம் நிறைவுபெற்றது.

 

முன்னதாக செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:

 

விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்கள் கொண்டு செல்வதை கெயில் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்து மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஒரு வாரகாலத்துக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

 

கட்சியில் அதிகமானோர் போட்டியிட விரும்புவதால் அதிக இடங்களை அளிக்கும் கூட்டணியில் இடம்பெறுவோம். குறைவான இடங்களே கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இதைத் தொடர்ந்து, அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி அவிநாசியை அடுத்த தாமரைக்குளத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக் குழுவினரைச் சந்தித்து சரத்குமார் ஆதரவு தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.