Show all

அரசு ஊழியர்கள் சங்கங்களின் போராட்டம் 9ஆம் நாளாகத் தொடர்கிறது

அரசு ஊழியர்களின்  காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 937 பேரைப் காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

 

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததுடன் தினமும்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் சங்கங்களின் போராட்டக் களத்தின் 8 ஆம் நாளான புதன்கிழமை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கி. நாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் வி. திருப்பதி ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் க. ஜெயபாலன், சி. கோவிந்தசாமி,தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். நாகராஜன், அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகி இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி காமராஜ் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இதையடுத்து சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் 692 பெண்கள் உள்ளிட்ட 937 பேரைப் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

     வருவாய் துறை சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் பக்கீர் முகமது, சத்துணவு ஊழியர் சங்க தலைவர் மணிமாறன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் இரா.கண்ணன்,ஆர். மாணிக்கம் உள்ளிட்டோர் அறந்தாங்கி அண்ணா சிலை அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி காவல் உதவி ஆய்வாளர் எஸ். கோபிநாத் 250 பேரை கைது செய்தார்.

 

அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் எம். ஜோஸி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் எஸ். வின்சென்ட் தலைமையில் ஒன்று திரண்ட அரசு ஊழியர்கள், விராலிமலை சோதனைச்சாவடி அருகே திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்த விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் மறியலில் ஈடுபட்ட பெண்கள் 416 மற்றும் ஆண்கள் 48 பேரைக் கைது செய்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.