Show all

ரஜினிகாந்தின் கபாலி பட முன்னோட்டக் காட்சிகள் இணையதளத்தில் வெளியானது

ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட முன்னோட்டக் காட்சிகள் இணையதளத்தில் நேற்று வெளியானது. இதனை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்தனர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் ‘கபாலி’.

ராதிகா ஆப்தே, நாசர், தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, பாங்காக் உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

ரஜினிகாந்த் சமீபத்தில் ‘டப்பிங்’ பேசி முடித்தார்.

இந்த படத்துக்கான தொழில்நுட்பப் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. கபாலி படத்தின் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில் வருகிறார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்தப் படத்தின் 65 வினாடிகள் ஓடும் முன்னோட்ட காட்சிகளை (டீசர்) நேற்று காலை 11 மணிக்கு, படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு யூடியூப் இணையதளத்தில் வெளியிட்டார்.

முன்னோட்ட காட்சி வெளி வந்த சில நிமிடங்களிலேயே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. லட்சக்கணக்கானோர் இதனைப் பார்த்தனர். பதிவிறக்கமும் செய்தனர். மாலை 6 மணியளவில், இந்த காட்சிகளைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது.

 

இது சாதனை ஆகும். ‘கபாலி’ முன்னோட்ட காட்சியில் ரஜினிகாந்த் ஸ்டைலான தாதாவாக கலக்கி இருந்தார். மிடுக்காக நடந்து வருவது போன்றும், வில்லன்களை பந்தாடுவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ரஜினியை காட்டும்போது நெருப்புடா... என்ற பாடல் வரியின் பின்னணி இசையில் ரஜினிகாந்த் ஆவேசமாக நடந்து வருகிறார்.

 

‘யாருடா அந்த கபாலி, வர சொல்லுடா... அவனை’

என்று வில்லன் குரல் எழுப்ப,

ரஜினிகாந்த்,

‘தமிழ் படங்கள்ல இங்கே மறு வச்சிக்கிட்டு மீசை முறுக்கிட்டு, லுங்கி கட்டுக்கிட்டு நம்பியார், 

ஏய் கபாலி! அப்படின்னு சொன்ன உடனே

குனிஞ்சு சொல்லுங்க எஜமான்!

அப்படி வந்து நிப்பானே அந்த மாதிரி கபாலின்னு நினைச்சியாடா? கபாலிடா...?.’

என்று கர்ஜித்தபடி வில்லனை காலால் மிதிக்கும் காட்சிகளுடன் ரஜினிகாந்த் கம்பீரமாக வருகிறார்.

‘கபாலி’ பட முன்னோட்ட காட்சியை

நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், நடிகைகள் ஹன்சிகா, பார்வதி நாயர், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், ராம் கோபால் வர்மா, ராஜ மவுலி உள்பட திரையுலகை சேர்ந்தவர்கள் பிரமாதமாக இருந்ததாக பாராட்டி உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.