Show all

ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் கொடுக்கும் மரியாதையா? விஜயகாந்த்

கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததற்காக தான் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தஞ்சாவூரில் நிவாரணம் வழங்க வேண்டி தேமுதிக சார்பில் எனது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றபின் அதிமுகவை சேர்ந்தவர்கள் மேடை, ஒலிபெருக்கிகள், ப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கொடி, தோரணங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்து கொளுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் ப்ளெக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டு எனது உருவ பொம்பை எரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய தேமுதிகவினர் வேன் கும்பகோணத்தில் வழிமறித்து கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டது. வேன் மீது தாக்குதல் நடத்தும்போது அதன் அருகில் ஆம்புலன்ஸ், பள்ளி வேன், பயணிகள் பேருந்து மற்றும் தனியார் கார் வந்துகொண்டிருந்தன. அவற்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எல்லாம் நடக்கும்வரை அமைதியாக ஒருநாள் முழுவதும் இருந்துவிட்டு அதன்பிறகு தேமுதிகவை சார்ந்தவர்கள்தான் தரம் தாழ்ந்து நடந்துகொண்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தரமில்லாதவர்களுடன் 2011ல் கூட்டணி அமைத்து தரம் தாழ்ந்த ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று, அவர்கள் ஆட்சி அமைத்திட பாடுபட்டதற்காக நான் வெட்கப்படுகிறேன். ஜெயலலிதா என்னுடன் கூட்டணி அமைக்கும்போது தரம் தாழ்ந்திருக்கிறோம் என்பது அப்போதே தெரியவில்லையா? அது இப்போதுதான் தெரிகிறதா? மீண்டும் சொல்கிறேன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தமைக்காக நான் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.

ஜெயலலிதா தலைமையில் உள்ள அதிமுகவின் தரம் எப்படி இருக்கிறதென்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தர்மபுரியிலே மாணவிகளை எரித்த சம்பவமும், ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா சிறைக்கு செல்லும்போது அதிமுகவினர் நடத்தும் தரம் தாழ்ந்த அராஜகங்களையும், வன்முறைகளையும் மக்கள் பார்க்கிறார்கள்.

இவரது அதிமுக மட்டுமே கண்ணியமிக்கது போலவும், மக்களுக்கு தொண்டாற்றுவது போலவும் கூறியுள்ளார். 1996ல் ஊழல் குற்றச்சாட்டால் முதலமைச்சராக இருந்தபோதே பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனீர்களே. அப்போதே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் அதிமுகவில் இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது. தற்போது ஏற்பட்ட வௌ;ள நிவாரண பணியில் தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் கொண்டுவந்த நிவாரண பொருட்களை பறித்து, அதிமுகவினர் எப்படி ஸ்டிக்கர் ஒட்டி மக்கள் தொண்டாற்றினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதல்வராக மாறிவிட்டார். எனக்கு எதிராக எதையும் செய்ய வேண்டாமென அறிவித்தும், கன்னியாகுமரியிலும், விழுப்புரத்திலும், அரியலூரிலும் உருவபொம்பையை எரித்து உள்ளார்கள். இதுதான் அதிமுக தொண்டர்கள் கட்டுப்பாடா? ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் கொடுக்கும் மரியாதையா?

நான் தேமுதிக தொண்டர்களிடம் ஆளும் அதிமுக எனக்கு எதிராக வன்முறையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்துவிட்டாலும், நீங்கள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி இருந்தேன். அதற்கு கட்டுப்பட்டு தேமுதிக தொண்டர்கள் எங்கேயும் எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடவில்லை.

கட்டுப்பாடுமிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? மழை வௌ;ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், சேதங்களையும் மறைத்திடவும், நிவாரணம் எங்கேயும் வழங்காமல் இருப்பதை மக்களிடம் மறைத்திடவும் ஸ்டிக்கர் அரசாங்கத்தால் நடத்தப்படும் நாடகமே இதுவாகும்.

மேலும் இந்த வன்முறை, அராஜகத்தை கண்டித்து குரல்கொடுத்த பாஜக, காங்கிரஸ் சி.பி.எம், சி.பி.ஐ, திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் என அனைத்து அரசியல் கட்சியினருக்கும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் எனக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியவர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் என்னை ஆதரித்து கருத்துக்களை பதிவேற்றம் செய்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.