Show all

தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார் பாஜக தமிழகப் பொறுப்பாளர்

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் நேற்று மாலை திடீரென்று தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார்.

வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது. வரவிருக்கும் தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கு முரளிதர் ராவ், விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.

முன்னதாக நேற்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார்.

கடந்த வாரம் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த மக்கள் நலக் கூட்டணியினர், தங்களது கூட்டணியில் இணையுமாறு அவரை வலியுறுத்தினர். அதே நாளில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, திமுக கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தை அழைத்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களை கைப்பற்றியது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.