Show all

வரும் வெள்ளிக் கிழமை கடும்புயல், பெருமழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை  நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும், வரும் வியாழக்கிழமை கடலூர், புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கும் போது காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும். மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் வியாழக்கிழமை புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயல் 13.5 வடக்கு அட்சரேகையில் இருக்கிறது. இது மேலும் மேற்கு வடமேற்காக நகர்ந்து வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் நாகை முதல் சென்னை வரை அல்லது புதுச்சேரி அல்லது கடலூர் பகுதிக்குத் தள்ளப்படும். ஆனால், எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று உறுதியாக இப்போது கூற முடியாது. மேற்கு, தென்மேற்காகப் புயல் நகரும்போது வேகமாக நகரும். ஆதலால், வியாழக்கிழமை கஜா புயல் கரையைக் கடக்கும்.

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் ஆழ்ந்த புயலாக மட்டுமல்லாமல் கடும் புயலாகவும், கடல்பகுதியில் மிகக் கடும் புயலாகவும் இருக்கும். வடக்கு தமிழக கடற்பகுதியை நெருங்கும்போது காற்று தீவிரமாகும். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க மாடல்கள் கூறுகின்றன. ஆனால், வரும் நாட்களில் அதன் தீவிரத்தன்மை தெரியவரும்.

சென்னை வானிலை மையம் அறிவிக்கும் சிவப்பு எச்சரிக்கை நம்பகமானது. ஆதலால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். 24 மணிநேரத்தில் 200மிமீ மழையைப் பெய்துவிட்டு செல்லும்.

புதுச்சேரி அல்லது கடலூர் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதன்பின், புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குள் செல்லும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கேட்டி, கொடநாடு, கோத்தகிரி பகுதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியவை.

கடலூரை நோக்கி கஜா புயல் சென்றுவிட்டால் சென்னைக்கு குறைந்த அளவே பாதிப்பு இருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகையில் புயல் கரையைக் கடக்கும்போது பெய்த மழை அளவு தரப்பட்டுள்ளது.

வடமேற்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கடற்கரைப்பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும். வட மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும். கேரள மாநிலத்தில்கூட மழை பெய்ய வாய்ப்புண்டு ஆனால், கஜா புயலால் தென் மாவட்டங்களுக்குக் குறைவான மழையே கிடைக்கும்.

நாளை முதல் வடதமிழக கடற்கரை முதல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிவரை கடல் மிகுந்த ஆவேசமாக இருக்கும். ஆதலால், வெள்ளிக்கிழமை வரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம். அரபிக் கடலுக்குள் சென்றபின் புயல் என்னாகும், எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதுவரை 23 விழுக்காடும், சென்னையில் 52 விழுக்காடும் மழை பற்றாக்குறையாக உள்ளது. இந்த கஜா புயலால் நமக்கு நல்ல மழை கிடைக்கும். வேகமாகப் புயல் நகரும்போது, குறைந்தநேரத்தில் அதிகமான மழையைக் கொடுக்கும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,969.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.