Show all

சோதனை செய்தபோது பாம்புகள் மற்றும் தேள் இருந்ததைக் கண்டு சுங்க அதிகாரிகள் பீதியில் ஓட்டம்.

சென்னை விமான நிலையத்தில்  பயணி ஒருவரின் கூடையைச் சோதனை செய்த போது  பாம்புகள் மற்றும் தேள் இருந்ததை கண்டு சுங்க அதிகாரிகள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்தப் பயணியைக் கைது செய்தனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். ராமநாதபுரத்தை சேர்ந்த கபித் நாசர் (55) சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியாவுக்கு சென்றுவிட்டு திரும்பினார்.

சந்தேகத்தின் அடிப்படையில் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அவரது சூட்கேஸ், பைகளைத் திறந்து பார்த்தபோது எதுவும் இல்லை. கையில் வைத்திருந்த ஒரு கூடையைத் திறந்து பார்த்தபோது 4 விஷ பாம்புகள் சீறிக்கொண்டு வெளியே வந்தன. இதனால் சுங்க அதிகாரிகள் அலறியடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் சென்று, பாம்புகளைக் கூடையில் போட்டு மூடினர். மேலும் அந்தக் கூடையில் கருந்தேள், பூரான்கள், சிலந்தி, எலி, ராட்சத பல்லி இருப்பதை கண்டுபிடித்தனர். இதுபற்றி கதிப் நாசரிடம் விசாரித்தபோது, இது விஷமற்ற பாம்புகள், இதை நான் கொண்டு வந்து வளர்த்து தெருக்களில் பாம்புகளை வைத்து வித்தை காட்டுபவர்களிடம் விற்பேன். அதேபோல் தேள், பூரான்களை இங்கு சிலர் வாங்குவார்கள். பாம்புக்கு உணவாக எலிகளைக் கொண்டு வருவேன் என்றார்.

ஆனால், அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து அவரை கைது செய்து விஷப்பாம்புகள் மற்றும் பூச்சிகளை பறிமுதல் செய்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.