Show all

தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு, 4 ஆண்டு கால சாதனை என்று அரசியல் எந்திரம்...

தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு, 4 ஆண்டு கால சாதனை என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. புகார் மனு அனுப்பியுள்ளது.

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தனிப்பட்ட முறையில் தமிழக அரசு கடந்த 4 ஆண்டு கால சாதனைகள் பிரசாரம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை மூலமாக எல்லா பொது இடங்களிலும் விளம்பரப்பலகைகள், துண்டு பிரசுரங்கள், 32 எல்.இ.டி. திரை கொண்ட பிரசார வேன்கள் பயன்படுத்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், முதல்அமைச்சர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் புகழ்ந்தும், நிரந்தர முதல்அமைச்சர் போன்ற வாசகங்கள் பயன்படுத்தியும், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் ஆகியவற்றைத் தமிழகம் முழுவதும் வினியோகித்தும், நிறுவியும் வருவதோடு, இப்பிரசாரத்திற்காக மாவட்டத்திற்கு ஒரு எல்.இ.டி. திரை வசதி கொண்ட வாகனம் வீதம் 32 வாகனங்களை வாங்கி, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் அரசு செலவில், விளம்பரப்படுத்துவதும்

ஆளுங்கட்சி ஆதரவான பிரசாரத்தை மேற்கொள்வதும் 13.5.2015 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதும் இந்திய ஆட்சிப்பணி விதிகள் 1968-க்கு முரணானதும் ஆகும். எனவே, அரசு செலவில் தனிப்பட்ட ஒரு அரசியல் தலைவருக்கு மேற்கொள்ளும் இப்பிரசாரப்பணிகள் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைவருக்கு உதவிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத்துறை செயலாளர்களுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கும் தி.மு.க. சார்பாக முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கடந்த 15-ந் தேதி பதிவு தபாலில் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், இந்தப் புகார் மனு டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம்சைதி,

தேர்தல் ஆணையாளர்கள் ஏ.கே.ஜோதி,

ஓம்பிரகாஷ் ராவத், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப்சக்சேனா

மற்றும் மத்திய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால்,

இப்பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பாக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.