Show all

33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றவை! தமிழக அரசு திடீர் அறிவிப்பு

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முப்பத்தி மூன்று பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுவரை இந்த வகையான பட்டப் படிப்புகளைப் படித்து முடித்துள்ளவர்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இருக்கக் கூடும் என்று கணிக்கப் படுகிறது.

தமிழ்நாட்டில் அறிவியல் முதுவர் (அறி.மு) கணினி அறிவியல், வணிகவியல் முதுவர் (வணி.மு) உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றுக்கு மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. அதேநேரத்தில் அப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் மிகக்குறைவாக இருப்பதாக, அவற்றுக்கு இணையாக 33 புதிய பட்டமேற்படிப்புகள் தொடங்கப்பட்டன. 

அறிவியல் முதுவர் (அறி.மு) கணினி அறிவியல், வணிகவியல் முதுவர் (வணி.மு) ஆகிய படிப்புகளைத் தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகள் மற்றும் உயர்படிப்புகளில் இந்த இணை படிப்புகளைப் படித்த மாணவர்களும் சேரலாம் என்று பல்கலைக்கழகங்கள் அறிவித்திருந்தன. 

ஆனால், இப்போது 33 புதிய பட்ட மேற்படிப்புகளும் அரசுப் பணிக்குத் தகுதியற்றவை எனத் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும், அவற்றிற்குட்பட்ட கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் கணினி பயன்பாட்டியல் முதுவர்  படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல் படிப்புகள்,

அதேபோல், பெரியார் பல்கலைக்கழகத்திலும், பாரதியார் பல்கலைக்கழகத்திலும் கற்பிக்கப்படும்  நிறுவனச் செயல்பாட்டியல் முதுவர் உள்ளிட்ட 20 படிப்புகள் அரசுப் பணிக்குத் தகுதியற்றவை எனத் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மூலப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் 70விழுக்காடு புதிய படிப்புக்கான பாடத்திட்டத்திலும் இடம் பெற வேண்டும் என்பது விதியாகும். ஆனால், புதிய பாடத்திட்டம் அத்தகையதாக இல்லை என்பதால் புதிதாகத் தொடங்கப்பட்டப் படிப்புகள் மூலப் படிப்புக்கு இணையற்றவை என்று அதற்காக அமைக்கப்பட்ட சமானக் குழுவின் 59-வது கூட்டத்தில் முடிவெடுத்து, அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை அபத்தமானது. பல்கலைக்கழகங்கள் செய்த தவற்றுக்காக அவற்றில் படித்த மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 33 வகையான புதியப் படிப்புகளுக்கு பாடத்திட்டத்தை வகுத்தது பல்கலைக்கழகங்கள்தான். இதற்காகவே, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டக் குழுக்கள் உள்ளன. அவை வகுத்துக் கொடுக்கும் பாடத்திட்டத்தைக் கல்வி நிலைக்குழுக்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகுதான் புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுவும், கல்வி நிலைக்குழுவும்தான் புதிய படிப்புக்கான பாடத்திட்டம் உரிய வகையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அக்குழுக்கள் தங்கள் பணியை சரியாகச் செய்யாததின் விளைவுதான் 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்திய படிப்புகளில் சேர்ந்ததைத் தவிர வேறு எந்தத் தவற்றையும் மாணவர்கள் செய்யவில்லை. அரசு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அப்படிப்புகளை வழங்கும்போது அவற்றில் மாணவர்கள் சேருவது இயல்பான ஒன்றுதான். இந்தப் படிப்புகளில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 25,000 மாணவர்கள் சேருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் இப்படிப்புகளைப் படித்து பட்டம் பெற்றிருப்பார்கள். இத்தகைய சூழலில் இந்தப் படிப்புகள் அரசுப் பணிக்கு தகுதியற்றவை என்று அறிவித்திருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இப்படிப்புகள் அரசுப் பணிக்கு தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி தனியார் நிறுவனங்களும் இப்படிப்பு முடித்தவர்களை நிராகரிக்கக்கூடும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

எனவே, இந்தக் கல்வியாண்டு வரை இப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பெற்ற பட்டங்கள: அறிவியல் முதுவர் (அறி.மு) கணினி அறிவியல், வணிகவியல் முதுவர் (வணி.மு) ஆகியவற்றுக்கு இணையானவை; அரசு வேலைக்குத் தகுதியானவை என்று அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இப்படிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று பாமக சார்பாக அன்புமணி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,005.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.