Show all

மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கும்பகோணம் மகாமகம் திருவிழாவை முன்னிட்டும், பாசனத்துக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காவேரி  டெல்டா  மாவட்டங்களின்  பாசனத்திற்காக  9.8.2015  அன்று  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டதை அடுத்து, காவேரி டெல்டாவில் முழு வீச்சில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளது.

 

காவேரி  டெல்டாவில்  ஒரு  சில  பகுதிகளில்  தாமதமாக  நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால்  அப்பகுதிகளில்  பயிரிடப்பட்டுள்ள  பயிர்கள்  அறுவடை  செய்வதற்கு காலதாமதம்   ஆகும்   எனத்   தெரிவித்து,   மேட்டூர்   அணை   வழக்கமாக   மூடப்படும்   நாளான ஜனவரி  மாதம்  28-ஆம் நாளுக்குப் பிறகும் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

 

மேலும்,  தஞ்சாவூர்  மாவட்டம்,  கும்பகோணத்தில்  12  ஆண்டுகளுக்கு  ஒரு  முறை கொண்டாடப்படும்  மகாமகத்  திருவிழா  வருகின்ற  22.2.2016  அன்று  நடைபெற  உள்ளது.

 

நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் மகாமகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் நகரத்திற்கு வர இருக்கின்றனர்.  விழாவிற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஏற்கெனவே நான் ஆணையிட்டுள்ளேன்.

 

இத்தகைய  சூழ்நிலையில்,  காலதாமதமாக  சுமார்  70,000  ஏக்கர்  நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்குத் தேவையான தண்ணீரைத் தொடர்ந்து வழங்கவும், மகாமகத் திருவிழாவினைப்   பொதுமக்கள்   மகிழ்ச்சியுடன்   கொண்டாடுவதற்கு   ஏதுவாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஒரு சிறப்பு  நிகழ்வாகக் கருதி 28.1.2016 முதல் 25.2.2016 வரை  நாள்  ஒன்றிற்கு  6000  கன  அடி  தண்ணீரை  மேட்டூர்  அணையிலிருந்து  திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.