Show all

சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பது குறித்து ராமதாஸ் அறிக்கை

தமிழகத்துக்கு முதலமைச்சரான ஜெயலலிதா சென்னையில் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளும்  வெள்ளக்காடாக மாறியிருப்பதுடன், அனைத்து வகை தொற்று நோயும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அண்மைக் காலங்களில் இல்லாத வகையில் நேற்றிரவு 2 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையில் 160 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதனால் சென்னை மாநகரில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளும் தண்ணீரில் மூழ்கி விட்டன.

மேலும், சாலைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்வண்டிப் பாதைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் தொடர்வண்டிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

சென்னை புறநகர் மற்றும் வட சென்னையில் 4 நாட்களாக நீடிக்கும் மழையால் அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வார்த்தைகளில் அடக்க முடியாது. வடசென்னைக்குச் செல்லும் அனைத்து சாலை சுரங்கப் பாதைகளிலும்  வெள்ள நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

இதனால் வடசென்னை சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்டு தனித் தீவாக காட்சியளிக்கிறது. சென்னை அம்பத்தூர் பகுதியிலுள்ள பட்டரவாக்கம் ஏரி, தாங்கல் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளும், குளங்களும் உடைந்து விட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.

கொளத்தூர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பது மட்டுமின்றி, கழிவு நீர் குழாய்கள் உடைந்து விட்டதால் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான இராதாகிருஷ்ணன் நகரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அத்தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடப்பதாலும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து விட்டதாலும் தொற்று நோய் பரவும் ஆபத்து உருவாகியுள்ளது.

சென்னையின் வணிகத் தளமான தியாகராய நகரில் கூட மழைநீரை வடியச் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. வேளச்சேரி, மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளிலும்  வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அங்குள்ள மக்கள் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர்.

மழை வெள்ளத்தால் சென்னை மாநகர மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில், இதைப்பற்றி முதலமைச்சரோ, சென்னை மாநகர மேயரோ எந்த கவலையும் கொள்ளவில்லை.

மீட்புப் பணிகளை முடுக்கி விட வேண்டிய மாநகர மேயர் இன்று மதியம் வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் முதலமைச்சரான ஜெயலலிதாவும் சென்னையில் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை.

சென்னையில் பெய்த 16 செ.மீ. மழை என்பது அதிகம் தான் என்றாலும் சமாளிக்க முடியாததல்ல. ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சென்னையின் அனைத்து பகுதிகளும் குளங்களாக மாறுவதற்கு காரணம் மழை நீர் வெளியேறும் அனைத்து தடங்களும், நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏரி, குளங்களும் தமிழகத்தை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தான்.

குறைந்தபட்சம் மழை காலத்திற்கு முன்பாக மழைநீர் வடிகால்களைத் தூர்வாரியிருந்தால் கூட நிலைமை மோசமாகாமல் தடுத்திருக்கலாம். ஆனால், ஊழல் செய்வதைத் தவிர வேறு எதற்கும் நேரமில்லாத அதிமுக அரசும், மாநகராட்சியும் இவற்றைச் செய்யாததால் தான் சென்னை  வெள்ளத்தில் மிதக்கிறது.

தேர்தலில் மக்கள் வெற்றியைத் தந்தது ஆட்சி அதிகாரத்தின் ஆடம்பரங்களை அனுபவிக்கவும், ஊழல் செய்யவும் தான் என்ற நினைப்பிலிருந்து விடுபட்டு, மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற யதார்த்தத்திற்குள் வர வேண்டும். சென்னை மாநகரில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.