Show all

ஓடும் பேருந்தில் தீ! அலரி அடித்துக் கொண்டு பயணிகள் ஓட்டம்; முழுபேருந்தும் எரிந்து சாம்பல்; பயணிகள் அனைவரும் தப்பித்தனர்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் இருந்து தேனி செல்ல இருந்த ஆம்னி பேருந்து ஒன்று பெருங்களத்தூரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு நள்ளிரவில் வாகனங்கள் நகர முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளி, சனிக்கிழமைகளில் வழக்கமாக இச்சாலைகளில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படும். நேற்று இரவு திடீரென்று தீ விபத்தும் ஏற்பட்டதால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதித்து, ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டனர்.

சென்னை அடையாறிலிருந்து இரவு 7.30 மணிக்கு ஜாய் ஆம்னி என்ற தனியார் பேருந்து தேனி மாவட்டம் கம்பம் என்ற ஊருக்கு புறப்பட்டது. பேருந்து கோயம்பேடு வழியாக மதுரவாயல், தாம்பரம் நேரடிச் சாலையில் வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர்.

இரவு 10.05 மணிக்கு பெருங்களத்தூர் அருகே இரும்புலியூர் பாலத்தில் வந்த போது திடீரென பேருந்தில் முகப்பு விளக்கு கம்பிகள் கருகி தீப்பிடித்தது. இதனால் பேருந்துக்குள் கடும்புகை மண்டலம் ஏற்பட்டது.

ஓட்டுநர் அவசரமாக பேருந்தை நிறுத்தி, கதவு மற்றும் அவசரகால வழிகளையும் திறந்தார். உடனே பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். அடுத்த ஓரிரு நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தீ விபத்து தொடர்பாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வண்டி வந்து தீயை அணைத்த போதும், பேருந்து முழுவதும் எரிந்து விட்டது. இந்த விபத்து காரணமாக சேலத்திற்கான நேரடிச்சாலை என்பதாலும் இன்றும் நாளையும் விடுமுறை என்பதாலும், சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை மிகுதி காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

இச்சம்பவம் பற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறை மற்றும் பீர்க்கன்காரணை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.