Show all

மிகச்சிறப்பாய் தலைநிமிர்ந்து வாழ்ந்த, பலரின் தொழில் நிமிர்த்திய மனிதர், தற்போது சிறையில்! ஆம் இராவணன் மசாலா நிறுவனர்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராவணன் மசாலா நிறுவனத்தையும், சீட்டு நிறுவனத்தையும் தாம்பரம் சேலையூர் பகுதியில் மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர், பிரபலமான சீயக்காய் தூள் நிறுவனத்தை நடத்திவந்த அரசியல் கட்சி பிரமுகரின் மூத்தமகனான ராமசாமி.

சீட்டு நிறுவனம் நடத்துகிறவர்கள் சீட்டுப்பதிவு சட்டப்படி, சீட்டு ஏலம் எடுத்தவர்களுக்கு, சீட்டுத்தொகை தருவதற்கு ஒரு மாதம் கால அவகாசம் எடுத்துக் கொள்வதற்கு சீட்டு சட்டம் இடம் தருகிறது.   

ஆனால் சீட்டு நிறுவனமும், ராவணன் மசாலா நிறுவனத்தையும் நடத்தி வந்த ராமசாமி, மேசைக்காசு என்று உடனே உரிய பிணையம் பெற்றுக்கொண்டு, சீட்டு பணம் கொடுத்து விடுவார் என்பது தாம்பரம் பகுதி வணிகர்களிடையே பிரபலமானவர். 

ஆனால் தற்போது ராவணன் ராமசாமி மீது பண மோசடி, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர் ராவணன் ராமசாமி ஆலந்தூர் அறங்கூற்று மன்றத்தில் அணியப் படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இராமசாமியின் மீது இன்றைக்கும் மதிப்பு கொண்டிருக்கிற வட்டாரத்தில் கூறுவதாவது:
தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ராமசாமியின் பெயர் பிரபலம். அவரை நம்பி ஏராளமான வணிகர்கள் ஏலச்சீட்டு போட்டனர். பல ஆண்டுகளுக்கு முன், ஏலச்சீட்டு செலுத்தியவர்களுக்குப் பணத்தை சரியாகக் கொடுத்துவந்தார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏலச்சீட்டு எடுத்தவர்கள் பணத்தைத் திரும்ப செலுத்தவில்லை. இதன்காரணமாக ஏலச்சீட்டில் பல பிரச்னைகள் ஏற்பட்டன. அதையெல்லாம் ராமசாமியும் அவரின் குடும்பத்தினரும் சரிசெய்துவந்தனர். இந்தச் சமயத்தில் அரசியல் கட்சி நடத்தி வரும் பிரபலமான நடிகர் ஒருவர்  50 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு சீட்டுகளைப்  போட்டுள்ளார். அவர் பணத்தை சரியாக செலுத்தாததால் ராமசாமிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது.

வெள்ள பாதிப்புக்குப் பிறகு, பண மதிப்பிழப்பு காரணமாக ராமசாமிக்கு மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. எந்தளவுக்கு வளர்ச்சியடைந்தாரோ அதே அளவுக்கு வீழ்ச்சியடைந்தார் என்றே சொல்ல வேண்டும். மசாலா நிறுவனத்தைப் பிரபலப்படுத்த லட்சக்கணக்கில் செலவழித்து நடிகைகள் மூலம் விளம்பரப்படுத்தினார். அதிலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் வரவில்லை. 

அவரின் மகனுக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த சொகுசு காரை ஏலச்சீட்டில் பணம் செலுத்தி ஏமாந்த ஒருவர் பறித்துச் சென்றுவிட்டார். கோழிக்கடை வியாபாரி ஒருவர், கேம்ப் சாலையில் உள்ள ராமசாமியின் இடத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மசாலா நிறுவனமும் ஒருவரின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது. இதனால் அனைத்து வகையிலும் முற்றுகையிடப்பட்ட ராமசாமி, ஏலச்சீட்டு செலுத்தியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் பழக்கடை வியாபாரி ஞானவேல் காவல்துறையில் கொடுத்த புகாரின்பேரில் ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். ராமசாமியை ஏமாற்றியவர்கள் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டால் எல்லா பிரச்னைக்கும் முடிவு ஏற்பட்டுவிடும் என்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,972.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.