Show all

பசு வதைத் தடுப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை

பசு வதைத் தடுப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என்று நடுவண் அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். ஐஏஎஸ் தேர்வில் சிறப்பிடம் பிடித்த தலித் மாணவர் டீனா தாபிக்கு தில்லியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அவர் மேலும் பேசியதாவது: பசு பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்வோர் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலித்துகள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தினர். பசு வதைத் தடுப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது ஹிந்துத்துவத்தில் சமூக வேறுபாடுகளுக்கு அனுமதி இல்லை. வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக சமூக பாகுபாடு பார்ப்பவர்களை ஹிந்து என்று அழைக்க முடியாது. நீங்கள் பசுவை மதிக்கிறீர்கள் என்றால், அது மிகவும் சிறப்பானது. அதேவேளையில், மற்ற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்வதற்கும், அவரவர் விரும்பியச் செயல்களை செய்வதற்கும் உரிமை உண்டு. பசுவை மதிப்பதில் தவறில்லை. அதற்காக, பசு வதை என்ற போலி காரணத்தைக் காட்டி ஒருவரை கொல்ல வேண்டும் என்று அர்த்தமில்லை. தலித்துகள் மீதான தாக்குதலைத் தடுக்க சிலர் கூறுவதுபோல் மதமாற்றம் சாத்தியப்படாது. வேறு மதத்துக்கு மாறி, மீண்டும் தாய் மதத்துக்குத் திரும்பிய சிலர், அந்த மதத்திலும் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்ததாக தெரிவிக்கின்றனர் என்றார் அவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.