Show all

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 45 நிமிஷங்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துள்ளனரே?

பதில்: அந்தச் சந்திப்பு தொடர்பாக விஜயகாந்த் எந்தக் கருத்தையும் கூறியதாகத் தெரியவில்லை. அந்த நிலையில் நானும், அது பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

கே: இன்றைய ஆலோசனை கூட்டத்தில், திமுக கூட்டணியில் தேமுதிகவைச் சேர்ப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதா?

ப: திமுக சார்பில் கூட்டணியை உருவாக்கும்போது, விஜயகாந்தும் அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டுமென்ற விருப்பம் எங்களுக்கு உண்டு. அது தொடர்பாக அவர் (விஜயகாந்த்) என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை.

கே: இதை நீங்கள் விஜயகாந்துக்கு விடுக்கும் அழைப்பாக எடுத்துக் கொள்ளலாமா?

ப: நான் சொல்வதே அழைப்புதான்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேட்டி அளித்தார்.

விஜயகாந்த் -மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெறுமா? கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவும் திமுக தயாராக இருக்கிறது. கருணாநிதியின் அழைப்புக்கு விஜயகாந்தின் பதில் எப்படி இருக்கும் என்பதைப் பொருத்து இந்த நடவடிக்கை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

திமுகவுக்கு அனுசரணையான பதில் விஜயகாந்திடம் இருந்து வந்தால், அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தும் அழைப்பு விடுக்கத் தயாராக இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜன.5-இல் ஆர்ப்பாட்டம்: வௌ;ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அதிமுக ஆட்சியே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு கருணாநிதி தலைமை வகிக்க உள்ளார்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை எந்தவிதமான தடையும் வராமல் நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.