Show all

மக்களை ஏமாற்றிட மேற்கொள்ளப்பட்ட காகிதப்பூ நிதிநிலை அறிக்கை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கரை ஆண்டு காலம் நாசகர பொருளாதாரக் கொள்கைகளால் மக்களது வாழ்வை சீரழித்த நரேந்திர மோடி அரசு நாட்டு மக்களை ஏமாற்றிட மேற்கொள்ளப்பட்ட காகிதப்பூ நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மோடி அரசால் நாட்டு மக்களை ஏமாற்றிட மேற்கொள்ளப்பட்ட காகிதப்பூக்கள் நிதிநிலை அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் சூடான பதிவு:

கடந்த  நாடாளுமன்றத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, உழவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, விளைபொருளுக்கு நியாய விலை வழங்குவது, வேளாண் கடன் தள்ளுபடி, கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்து அனைவரது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வைப்பு செய்யப்படும் உள்ளிட்ட அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஓடும் ஆற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள் ஆகிப் போயின.

பண மதிப்புநீக்க நடவடிக்கை, சரக்கு-சேவை வரி விதிப்பு போன்றவற்றால் உழவு, தொழில், வணிகம் அனைத்தும் நொறுக்கப்பட்டு விட்டன. இவற்றால் வேதனையடைந்த மக்களின் வேதனை போக்க வழியில்லாமல் மாதம் ஐநூறு ரூபாய் எதில் சேர்த்தி?

பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ள பல திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாததால் இவை வெறும் அறிவிப்புகளாகவே நீடிக்கும்.

சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் என்ற காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 3000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது 150 கோடி மக்களுக்கான திட்டமாகும். எனவே, தலைக்கு வெறுமனே ரூபாய் இருபதை ஒதுக்கி விட்டு அவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மருத்துவக் காப்பீட்டு வசதிகள் கிடைக்கும் என்பது நடைமுறையில் அமல்படுத்த முடியாத வெற்று அறிவிப்பாகவே அது அமையும்.

அகில இந்திய மருத்துவக் கழகத்தின் சிறப்பு மருத்துவமனைகள் 22  இருப்பதாக கூறப்பட்டாலும், அவற்றில் புதிதாகத் தொடங்கப்பட்ட14 மருத்துவமனைகளுக்கு முழுமையான நிதி ஒதுக்கீடு இல்லை. தேவையான மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பு செய்யப்படுவதற்கு பல காலம் பிடிக்கும் என்ற விசயம் மறைக்கப்படுகிறது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணம் பெருமளவு கைப்பற்றப்படவில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி) அறிக்கை குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது 1.30 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டதாக அறிவித்திருப்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

தேசிய மாதிரி ஆய்வுக்குழு: பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு-சேவை வரி உயர்வால் வேலையின்மை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என தனது அறிக்கையில் கூறியது. இந்த அறிக்கையை மூடி மறைப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது பதவியை விட்டே விலகி விட்டார்கள். இத்தகைய மோசடி செய்த நடுவண் அரசு, வரவு செலவுத் திட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கப்போவதாக மக்களை ஏமாற்ற முனைகிறது.

தொலைநோக்கு திட்டம் 2030 என்ற முறையில் நிதிநிலையில் செய்யப்பட்டுள்ள அறிவிப்புகள் இதுவரை அவர்கள் சொல்லி வந்த பல கனவுத்திட்டங்களை தூசு தட்டி எடுத்த தொகுப்பாகவே அமைந்துள்ளது. இவற்றை நிறைவேற்றுவதற்கான எந்தவிதமான கால அவகாசமோ, நிதி ஆதாரமோ, அங்கீகாரமோ இல்லை.

மொத்தத்தில் நடுவண் அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது, வரவிருக்கிற தேர்தலில் பாஜகவுக்கும் பலனளிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,050.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.