Show all

ஆம் ஆத்மி விழுந்து புரண்டு நிருவாகம் கற்று வருகிறது

ஊழல் ஒழிப்புக்காக வென்று கட்சி தொடங்கிய ஆம் ஆத்மி விழுந்து புரண்டு நிருவாகம் கற்று வருகிறது டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத் தலைவராக துணைநிலை ஆளுநரே செயல்பட முடியும் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட வேண்டிய அவசியமில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2015 மே 21-ம் தேதியன்று நடுவண் அரசு ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் நடுவண் அரசு பிறப்பித்த அறிவிக்கை சட்டவிரோதமானது அல்ல என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் ஜி.ரோஹினி, ஜெயந்த் குமார் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் செய்வதில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கே அதிகாரம் என்று நடுவண் உள்துறை அமைச்சகம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது. ஆளுநர் விருப்பப்பட்டால் மட்டுமே முதல்வரின் கருத்தை அறியலாம் எனத் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், நடுவண் அரசு ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் நடுவண் அரசு அறிவிக்கை வெளியிட்டது. இவற்றை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத் தலைவராக துணை நிலை ஆளுநரே செயல்பட முடியும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.