Show all

ஆக மொத்தத்தில் 100 மதிப்பெண் வாங்கும் தகுதியிலிருந்து ஒற்றை மதிப்பெண்ணுக்கு சரிந்திருக்கிறது தமாகா

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என்ற சாதனையோடு அரசியல் பயணத்தை தொடங்கிய தமாகா, தற்போதைய மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடக்கூடிய நிலைக்கு சரிவை சந்தித்திருக்கிறது.

23 ஆண்டுகளுக்கு முன்பு, அதிமுகவுடன் கூட்டணி என அன்றைய காங்கிரஸ் தலைவரும், தலைமைஅமைச்சருமான பி.வி.நரசிம்மராவ் எடுத்த முடிவு, தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மூப்பனார், அதில் இருந்து வெளியேறி, 'தமிழ் மாநில காங்கிரஸ்' (தமாகா) கட்சியை தொடங்கினார். ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மட்டுமல்லாது, 80 விழுக்காடு காங்கிரஸ் கட்சியே தமாகாவுக்கு இடம் பெயர்ந்தது.

அப்போது நடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 20 மக்களவைத் தொகுதிகள், 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மிதிவண்டி சின்னத்தில் போட்டியிட்ட தமாகா அனைத்திலும் வென்று சாதனை படைத்தது.

நடுவண் அரசில் தேவகவுடா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் மூப்பனாரின் பங்களிப்பு அதிகம். அடுத்த ஆண்டு தேவகவுடாவின் ஆட்சி கவிழ்ந்ததும் தலைமைஅமைச்சர் பதவிக்கான போட்டியில் மூப்பனார் முதலிடத்தில் இருந்தார்.

அடுதத முறை மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 பாராளுமன்ற இடங்களே கிடைத்தன. இதனால் தமாகாவின் முதன்மைத்துவம் குறைந்தது. 

அதற்கு அடுத்த மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி ஏற்பட்டது. தங்கள் கூட்டணியில் இணையுமாறு மூப்பனாரிடம் கருணாநிதி வற்புறுத்தினார். ஆனால், பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மறுத்து, விசிக, ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுடன் தனி அணி அமைத்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மூப்பனார்.

அதிமுகவுக்கு எதிராக 23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமாகா, அடுத்த ஐந்தே ஆண்டுகளில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 

மூப்பனார் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ஜி.கே.வாசன் கட்சித் தலைவரானார். மூன்று முறைக்கு முந்தைய மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமாகாவை காங்கிரசுடன் இணைத்தார். காங்கிரஸ் தேசிய செயலாளர், தமிழக காங்கிரஸ் தலைவர் போன்ற பதவிகளை வகித்த ஜி.கே.வாசன், நடுவண்அமைச்சரவையில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் 8 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 4.3 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. அந்தச் சூழலில் ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமாகாவை மீண்டும் தொடங்கினார் ஜி.கே.வாசன்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், வேலூர் ஞானசேகரன் என மூத்த தலைவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமாகாவில் இணைந்தனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்துடன் அக்கட்சிக்கு அனுசரணையாகவே இருந்தார் ஜி.கே.வாசன். ஆனால் அவர் எதிர்பார்த்ததுபோல அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.

வேறுவழியின்றி, கடைசி நேரத்தில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. 'தென்னந் தோப்பு' சின்னத்தில் போட்டியிட்டு, தோல்வியை சந்தித்தது தமாகா. எஸ்ஆர்பி, பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன் உள்ளிட்டோர் தமாகாவில் இருந்து வெளியேறினர். இதனால் தமாகா மேலும் பலவீனம் அடைந்தது. 

இந்த சூழலில், மோடி அடாவடியில் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிற அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதி மட்டும் ஒதுக்கப் பட்டது.

ஆக மொத்தத்தில் 100 மதிப்பெண் வாங்கும் தகுதியிலிருந்து ஒற்றை மதிப்பெண்ணுக்கு சரிந்திருக்கிறது தமாக. இந்த சூழலில், தமாகாவுக்கு மீண்டும் மிதிவண்டி சின்னம் கிடைத்திருப்பது மட்டுமே தொண்டர்களின் ஒரே ஆறுதல்.

மீண்டும் மிதிவண்டியா! ஆனாலும் புல்லட் பைக் கொடுத்திருந்திருந்தால் ஜிகே.வாசனுக்;கு மனதளவில் ஏதாவது ஆறுதல் கிடைத்திருக்கலாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.