Show all

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இழந்துள்ளார்

தேமுதிகவைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் உள்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தனர். இதற்கான கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளித்தனர்.

 இந்த ராஜிநாமா கடிதங்களைப் பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். 8 உறுப்பினர்களின் ராஜிநாமாவால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இழந்துள்ளார்.

 இதற்கான காரணத்தை விளக்கி, சட்டப் பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பு:

 கடந்த தேர்தலின்போது 28 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, தேமுதிக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைந்தது.

 இதனால், பேரவை விதிப்படி, எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிப்பதற்குரிய தகுதியை விஜயகாந்த் இழந்துள்ளார். எனவே, அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தையும், சலுகைகளையும் இழக்கிறார்.

 மேலும்,பேரவையில் எந்த ஒரு கட்சிக்கும் 24 உறுப்பினர்கள் கிடையாது. எனவே, எதிர்கட்சித் தலைவர் என்று வேறு எந்த சட்டப் பேரவைக் கட்சித் தலைவரையும் அங்கீகரிக்க இயலாது என பேரவைத் தலைவர் அறிவித்துள்ளதாக, ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள்; அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 8 பேர் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் பேரவையில் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வந்தனர்.

 14-ஆவது சட்டப் பேரவையின் கடைசி கூட்டத்தொடர் சனிக்கிழமை முடிவடைந்தது. இந்த நிலையில், தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களான மு.அருண் சுப்பிரமணியன் (திருத்தணி), செ.அருண்பாண்டியன் (பேராவூரணி), ஆர்.சாந்தி (சேந்தமங்கலம்), ஆர்.சுந்தரராஜன் (மதுரை மத்திய தொகுதி), டி.சுரேஷ்குமார் (செங்கம்), க.தமிழழகன் (திட்டக்குடி), க.பாண்டியராஜன் (விருதுநகர்), சி.மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்) ஆகிய 8 பேரும் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். அப்போது, தங்களது சட்டமன்ற உறுப்பினர். பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறி 8 பேரும் கடிதத்தை அளித்தனர்.

 பின்னர், அவர்களது ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இதே போன்று, பாமக-வைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கலையரசு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி ஆகியோரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக, பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். அவர்களின் கடிதத்தை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

 கலையரசுவின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, பாமகவுக்கு பேரவையில் உறுப்பினர்கள் பலம் இரண்டாகவும், புதிய தமிழகம் கட்சியின் பலம் ஒன்றாகவும் குறைந்துள்ளது.

 

     சட்டப் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த 10 பேரும், அதிமுகவில் திங்கள்கிழமை இணையவுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, அவர்கள் அனைவருக்கும் அதிமுக உறுப்பினருக்கான அடையாள அட்டையை அளிக்கிறார்.

 கட்சித் தாவல் தடைச் சட்டம் காரணமாக, வேறொரு கட்சியின சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு மற்றொரு கட்சிக்குச் செல்ல முடியாது. இதனால், அனைவரும் தங்களது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து இப்போது அதிமுகவில் அவர்கள் 10 பேரும் இணையவுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.