Show all

கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள் வாழ்த்துக்கள்! இன்று, இயற்கை போற்றும் தமிழரின், கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள் என்பது: இயற்கையின் இருள் அண்டிய குளிர் பருவத்தில், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நாள்மீன் வரும் நாளாகும். 

திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் விளக்குகளை ஏற்றி, இருளையும் குளிரையும் எதிர்கொள்ளுதலை, மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு விளக்கேற்றுத் திருநாள் ஆகும்.

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை நாள் மீன் ஆகும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை நாள்மீன் சிறப்பான நாளாக தமிழர்களால் போற்றப்பட்டு வருகின்றது.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் சிறப்பாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை நாளன்று கோயில்களில் விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். கோயில்களின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து சொக்கப்பனையைக் கொளுத்தி பெருந்தீ ஏற்றுவார்கள். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

'வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது' என்று நற்றிணையிலும்,

'கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்' என்று பரிபாடலிலும்
 
'ஆடு இயல் அழல் குட்டத்து' என்று புறநானூற்றிலும்,

'அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை' என்று மலைபடுகடாமிலும் 

'விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில் வேழம் தலை எனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கை' என்று பரிபாடலிலும், தமிழர் தம் விளக்கீட்டுத் திருநாள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து போற்றிக் கொள்ளப் பட்டு வருகிறது.

இந்த விளக்கீட்டுத் திருவிழாவை, புராணக் கதைகளோடு பொருத்தி தீபாவளியாக்கி, ஐப்பசி அமாவாசைத் திதியில் கொண்டாடத் தொடங்கினர் ஆரியர்கள். அதே காரணங்களோடு தமிழர்கள் மீதும் தீபாவளி திணிக்கப் பட்டாலும், காரணங்களை புறந்தள்ளி விட்டு இன்னொரு விழா கிடைத்தது என்று மகிழ்ச்சியாக,  தமிழர்களும் கொண்டாடி வருகிறோம் தீபாவளி. 

கிறுத்து பிறந்த நாளையும்- ரம்சானையும்- கேக்குகளையும், பிரியாணியையும் வரவேற்று, போற்றிக் கொள்ளத்தாமே செய்கிறோம், உலக இனங்களின் தாயாக இருக்கும் தமிழர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,980.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.