Show all

இணையதளம் மூலம் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு வசதிகள் அக்.16 முதல்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு வகைககளுக்காக இதுவரை 20.15 லட்சம் பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் இந்த முகாம்கள் நடந்தன. அதில், வாக்காளர் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக மட்டும் படிவம் 6-ஐ சுமார் 15.4 லட்சம் பேர் அளித்துள்ளனர்.

கடந்த 11-ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமில் மட்டும் 5 லட்சம் பேர் மனுக்களை அளித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் போது, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைக்கு தனியாக (படிவம் 001) விண்ணப்பிக்க வேண்டும். முதல் முறை வாக்காளர் என்றால், அவர்களிடம் அடையாள அட்டைக்கென தனியாக கட்டணம் வசூலிக்கப்படாது.

ஆனால், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அவர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தால் அவர்களிடம் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.

இணையதளம் மூலம் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது போன்ற சிறப்பு வசதிகள் வரும் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்படும். இணையதளம் போன்ற நவீன வசதிகள் மூலம் விண்ணப்பிக்கும் போது, வாக்காளர் பெயர் உள்ளிட்ட அடிப்படை விவரங்களில் எந்தத் தவறும் ஏற்படாது. வாக்காளர்களே அவர்களது விவரங்களைப் பதிவு செய்வதால் தவறுகள் அதிகளவு ஏற்படுவதில்லை என்றார் சந்தீப் சக்சேனா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.