Show all

காந்தியைக் கொன்றது ஆர்எஸ்எஸ் என்பதான கருத்தில் ராகுல் உறுதி

ஆர்எஸ்எஸ் மீதான கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ராகுல் காந்தி திரும்ப பெற்றுக்கொண்டார். வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு மீதான விசாரணை கீழ் நீதிமன்றத்தில் நடைபெறும். மகாராஷ்டிரா, தானே மாவட்டத்தில் பிவாண்டியில் மார்ச் 2014ல் ராகுல் காந்தி பேசிய தேர்தல் கூட்டமொன்றில், மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்கள் இன்று காந்திஜி என்று பேசுகின்றனர் என்று கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் குண்ட்டே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமை அமர்வின் முன் நடைபெற்றது. முன்னதாக, மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று கூறவில்லை என்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர் காந்தியின் கொலைக்குப் பொறுப்பு என்றுதான் கூறியதாகவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து வழக்கு செப்டம்பர் 1-ம் தேதி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், நான் எப்போதுமே இதை சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதையே சொல்கிறேன். இனியும் அதை சொல்வேன். எனது வார்த்தைகளில் நான் உறுதியாக இருக்கிறேன். வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். என ராகுல் தெரிவித்திருப்பதாக கூறினார். ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான யு.ஆர்.லலித், ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தொடர்ந்து அவமதித்திருக்கிறார். எப்போதெல்லாம் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறதோ, எப்போதெல்லாம் சிறுபான்மையினர் வாக்குகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை அவமதித்துள்ளார். என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.