Show all

ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கிய அதிகாரியைச் சுட்டுக்கொல்ல உத்தரவு

வடகொரியாவில் கிம் ஜோங் யுன்னின் ஆட்சி நடக்கிறது. அவரது தாத்தா, அப்பா, தற்போது அவர் என ஒரு குடும்பத்தினர்தான் ஆண்டு வருகின்றனர். உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அங்கு மனித உரிமை மீறல்கள் மிக அதிகளவில் நடப்பதாக சர்வதேச அரங்கில் குற்றம் சாட்டப்படுகிறது. கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர்போன வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் யுன் , தமது ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளது தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வழக்கமான ஆலோசனை கூட்டத்தை நாட்டின் உயர் அதிகாரிகளுடன் நடத்தினார். அப்போது கூட்டத்தின் இடையே கல்வித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் அசதியால் கண் அயர்ந்துள்ளதாக தெரிய வந்தது. இச்சம்பவத்தில் உக்கிர கோபமடைந்த கிம் ஜோங் அவரையும், அவருடன் இன்னொரு அதிகாரியையும் விமானத்தை சுட்டு வீழ்த்தப்பயன்படுத்தும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவை அடுத்து குறிப்பிட்ட அதிகாரிகளைக் கைது செய்துள்ள சிறப்பு உளவுப்பிரிவினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் குறிப்பிட்ட கல்வித்துறை அதிகாரிக்கு ஜனாதிபதி கிம் மீது கடும் வெறுப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் கிம் பிறப்பித்துள்ள சீர்த்திருத்தங்களைக் கல்வித்துறையில் அமல்படுத்தவும் மறுத்து வந்துள்ளதை விசாரணையில் உளவுப்பிரிவினர் தெரிந்து கொண்டனர். மட்டுமின்றி இவரது கிம் ஜோங் விரோத போக்கிற்கு பல முறை தண்டனையும் பெற்று வந்துள்ளதும் தெரிய வந்தது. இவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் தனது சொந்த திட்டமொன்றை ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்த காரணத்தினால் ஜனாதிபதி கிம் ஜோங் இவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.