Show all

மைசூரு மாவட்ட நீதிமன்றம் அருகே கழிவறையில் இன்று குண்டு வெடித்தது

கர்நாடக மாநிலத்தில் மைசூரு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் இன்று மாலை 4 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அப்போது நீதிமன்ற கட்டிடங்கள் அதிர்ந்தன. குண்டு வெடித்ததும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில், கழிவறையின் மேற்கூரையும், 3 சுவர்களும் இடிந்து விழுந்து கிடந்தன. அதிர்ஷ்டவசமாக கழிவறையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தக் குண்டு வெடிப்பில் கழிவறை அருகே நின்றிருந்த சிலர் லேசான காயமடைந்தனர். குண்டு வெடித்தது பற்றிய தகவல் அறிந்ததும் லட்சுமிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கழிவறை அருகே 2 மர்ம பொட்டலங்கள் கிடந்தன. அவற்றை மீட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். மேலும் குண்டு வெடித்த இடத்தில் இருந்து தடயங்களை வெடிகுண்டு நிபுணர்கள் சேகரித்தனர். மைசூருவில் இன்று நடந்த முதல் அமைச்சர் சித்தராமையா மகனின் இறுதி சடங்கில் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இதனால் மைசூரு நகரில் இருந்து ஏராளமான காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது. முதல் அமைச்சர் சித்தராமையா மகனின் இறுதி சடங்கில் பங்கேற்க அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் மைசூருவில் கூடி இருந்த நிலையில் குண்டு வெடிப்பு நடந்து இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குண்டு வெடிப்பு பற்றி அங்குள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.