Show all

தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் நடுவண் அரசு ஆர்வமின்றி இருப்பதாகத் தெரிகிறது! அறங்கூற்றுமன்றம் மதுரை கிளை

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி காமராஜ் என்பவர் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு பதிகை செய்தார். தூத்துக்குடி சிவகளைபரம்பு பகுதியிலும் அகழ்வாராய்ச்சி நடத்தவும் மற்றொரு மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனுக்கள் இன்று அறங்கூற்றுவர்கள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 'தமிழகத்தை நடுவண் தொல்லியல்துறை புறக்கணிக்கிறது. குஜராத்தில் அகழாய்வு மேற்கொள்ள நடுவண் அரசால் 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அகழாய்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை' என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

1.ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இருந்தும் இதுவரை அந்த அகழாய்வு பற்றி அறிக்கை பதிகை செய்யவில்லை. அறங்கூற்றுமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அறிக்கை பதிகை செய்வதில் நடுவண் அரசு ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் அறங்கூற்றுமன்றத்தை அணுக வேண்டியதுள்ளது. 

2.தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க தொல்லியல் அலுவலர் சத்தியமூர்த்தி தயாராக இருந்தார். நடுவண் அரசு அவருக்கு எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் அகவை கண்டறியும் சோதனைக்காக அவற்றை புளோரிடாவுக்கு அனுப்பவில்லை. என அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டிய அறங்;கூற்றுவர்கள், 'தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் நடுவண் அரசு ஆர்வமின்றி இருப்பதாகத் தெரிகிறது. தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது? தமிழகத்திற்கு பெருமை என்றால், அது இந்தியாவுக்கும்தானே?' என கேள்வி எழுப்பினர். 

நடுவண் அரசு தரப்பில் அணியமான வழக்கறிஞர், தொல்லியல் துறையின் உயர் அதிகாரிகளிடமிருந்து விளக்கம் பெற்று அறங்கூற்றுமன்றத்துக்கு தெரிவிக்கப்படும். என உறுதி அளித்தார். 

அறங்கூற்றுவர்கள் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.