Show all

காவிரி நீர் விவகாரத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் அரசின் கண்ணுக்குத் தெரியவில்லை.

காவிரி நீர் விவகாரத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் அரசின் கண்ணுக்குத் தெரியவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நடுவண் அரசும், மாநில அரசும் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் அனுபவித்து வரும் துன்பத்தையும், துயரத்தையும் உலகில் வேறு எவரேனும் அனுபவிப்பார்களா? என்பது ஐயம் தான். அந்த அளவுக்கு எண்ணற்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசின் கண்ணுக்கு தான் அவர்களின் பிரச்சினைகள் தெரியவில்லை.

தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் வறட்சியால் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழு அளவில் நடைபெறவில்லை. சம்பா சாகுபடியாவது செய்யலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விதை விதைத்து நாற்று நட்டிருந்த நிலையில், வறட்சி உச்சத்திற்கு சென்றிருப்பதால் காவிரி கடைமடை பகுதியில் பயிர்கள் காயத் தொடங்கியிருக்கின்றன.

மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் விட முடியும் என்ற நிலையில், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருக்கும் போதிலும் தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக அரசுக்கும் மனது வரவில்லை. சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட நடுவண், மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை அறிவித்திருக்கின்றனர்.

அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் 3-ம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூரில் உண்ணாநிலை போராட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகள் தான் உணவு படைக்கும் கடவுள் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு என்பதால், இப்போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவை தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், மேகதாது அணைக்கு தடை விதிக்க வேண்டும். என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.