Show all

தமிழகஅரசே, தமிழகஅரசே, அணைகட்டு, அணைகட்டு, ஆனைமலையாறு - நல்லாறு அணையைக்கட்டு! திருப்பூரில் விண்ணதிர்ந்த முழக்கம்

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் 35 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணைகள் கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட வேளாண் பெருமக்கள் நேற்று மாபெரும் கவன ஈர்ப்புப் பேரணியை நடத்தியுள்ளனர்.

திருப்பூர் பல்லடம் சாலை பகுதியில் நோற்று காலை கூடிய 5000-க்கும் அதிகமான உழவர்பெருமக்கள், அங்கிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாபெரும் பேரணியாகச் சென்றனர். அப்போது ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் பேராளர்கள், காமராசர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம். இத்திட்டத்தின் மூலம் பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சோலையாறு, உப்பாறு, மேல் நீராறு, கீழ் நீராறு, தூணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டன. ஆனால், இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய ஆனைமலையாறு - நல்லாறு அணைக் கட்டும் திட்டம் மட்டும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. கடந்த 35 ஆண்டுகளாக இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு அலட்சியமாக விட்டதால், இன்று திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட வேளாண்பெருமக்களின் எதிர்காலம் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

மாநில அரசின் ஆண்டு வருமானம் 400 கோடியாக இருந்த காலத்திலேயே இத் திட்டத்தைக் காமராசர் செயல்படுத்தினார். ஆனால் இன்று 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் ஈட்டும் தமிழக அரசு விட்டுப் போன திட்டப் பகுதியை நிறைவேற்றத் தயங்குகிறது. மானாவாரிப் பயிர்களான பருத்தி மற்றும் தானியப் பயிர்களை உற்பத்தி செய்து தற்சார்பு வேளாண்மை மேற்கொண்டிருந்த இப்பகுதி உழவர்களை, தென்னை சாகுபடிக்கு மாற்றிய பங்கு அரசுக்கு அதிகமாக இருக்கிறது. அதற்கு இந்த பாசனத் திட்டம்தான் பேருதவியாக இருந்து வருகிறது. ஆனால், இன்று தென்னை வேளாண்மைக்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல், கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வளர்க்கப்பட்ட கோடிக்கணக்கான தென்னை மரங்களில் 50விழுக்காடு மரங்கள் முற்றிலுமாகக் காய்ந்துபோய்விட்டன. இனி மீதமுள்ள மரங்களையாவது காப்பாற்றி, இப்பகுதி வேளாண்மையைப் பாதுகாக்கவும், குடிநீருக்காக கிராமப் பஞ்சாயத்துகள் செலவிடும் கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தவும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும். அதுவும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே 2 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என்றார்கள்.

பல ஆண்டுகளாக அவ்வப்போது வைக்கப்பட்டு வந்த ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்டும் கோரிக்கை தற்போது மாபெரும் போராட்டமாக பேருருவம் எடுத்திருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,942.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.