Show all

ஐ.பி.எஸ்., அதிகாரியாவதே தன் லட்சியம், என கூறியுள்ளார். திருநங்கை பிரித்திகா யாஷினி

இந்தியாவிலேயே, முதல் போலீஸ் துணை ஆய்வாளராக தகுதி பெற்றுள்ள திருநங்கை பிரித்திகா யாஷினி, ஐ.பி.எஸ்., அதிகாரியாவதே தன் லட்சியம், என கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா யாஷினி. திருநங்கையான அவர், இந்தியாவில், போலீஸ் துணை ஆய்வாளராக பணியில் சேர உள்ள முதல் திருநங்கை என்ற இலக்கை அடைந்து உள்ளார்.

சமூகத்தில் திருநங்கையர் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆணாக பிறந்து பெண்ணாக வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பது என் போன்றோருக்கு மட்டுமே தெரியும். பதின் பருவத்திலேயே திருநங்கையாக மாறி விடுவதால், குடும்பத்தார், சுற்றம், நண்பர்களால் நிராகரிக்கப்பட்டு, வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறோம்.

அதனால் எங்கள் கல்வித்தகுதி, 8ம் வகுப்பை கூட தாண்டாது. பலர் கல்வி அறிவே இன்றி வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். அதனால், பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் என்ற நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், திருநங்கைகள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளனர். எனினும், இது போதாது.

திருநங்கையாக மாறியது எங்கள் தவறல்ல; இயற்கை தந்த கொடை. வாழ விரும்புவது எங்களின் பிறப்பு உரிமை. அதற்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பெற்றோர் எனக்கு பிரதீப்குமார் என, பெயரிட்டனர். திருநங்கையாக மாறியதால், பிரித்திகா யாஷினி என மாற்றிக்கொண்டேன். சேலத்தில் பட்டப்படிப்பு முடித்தேன். 2011ல், சென்னைக்கு வந்தேன். என் போன்றோரின் உதவியால், இந்த நிலையை அடைந்துள்ளேன்.

நான் இந்த நிலைக்கு வந்தமைக்குக் காரணமாக இருந்த, குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

சிறுவயதில் இருந்தே போலீசாக ஆக வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக, உடற்பயிற்சிகள் செய்து வந்தேன்.

பிப்பரவரி மாதம், போலீஸ் துணை ஆய்வாளர் தேர்வுக்கு அறிவிப்பு வந்ததும் விண்ணப்பித்தேன். திருநங்கை என்பதால் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டனர்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பவானி மூலம் வழக்கு தொடர்ந்தேன். என்னை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். எழுத்து தேர்வில் வெற்றி பெற்று, உடல்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படாமல் இருந்தேன்.

அதற்கும் நீதிமன்றம் வாயிலாக அனுமதி பெற்றேன். உடல் திறன் போட்டிக்கான, 100 மீட்டர் ஓட்டம் போட்டியில், 17.5 வினாடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை, ஒரு வினாடி பின் தங்கியதால், என் போலீசாக ஆக வேண்டும் கனவு தகர்க்கப்பட்டது. இதற்கும் நீதிமன்றத்தின் உதவியை நாடினேன்.

நீதிபதிகள், போலீஸ் துணை ஆய்வாளராகப் பணியாற்ற எனக்கு அனைத்து தகுதியும் உள்ளதாகவும், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் எனவும், உத்தரவிட்டமைக்கு தலை வணங்குகிறேன். முதல்வர் கையில் பணி ஆணை பெறவும் விரும்புகிறேன்.

தற்போது, என் லட்சியத்தின், முதல் படியை தான் எட்டியுள்ளேன். எதிர்காலத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரியாகி, சிறந்த முறையில் பணியாற்றுவேன். அதற்காக, இப்போதே பயிற்சியைத் துவங்கிவிட்டேன். இனி வரும் காலங்களில், அரசு தேர்வு விண்ணப்பங்களில், என் போன்ற, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அளித்து, சமூக, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய அரசு வழி காட்ட வேண்டும். இவ்வாறு பிரித்திகா யாஷினி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.