Show all

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுமார் 4,000 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுமார் 4,000 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடுவண் அரசு அமல்படுத்த வேண்டும். இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை தொடர்பாக

ஐ.நா. மூலம் சர்வதேச விசாரணை நடத்த நடுவண்  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் நடுவண் அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுமென கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அறிவித்திருந்தார்.

அதன்படி கடலூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் மாநில நிர்வாகக்குழு தலைவர் தி.கண்ணன் தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாகச் சென்றனர். ஆனால், அவர்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் மு.ராமமூர்த்தி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, நகர செயலர் த.ஆனந்த், மாநில இளைஞரணி துணைத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 346 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கடலூரில் தலைமை தபால் நிலையத்தை மாநில மாணவரணி துணைச் செயலர் அருள்பாபு தலைமையில் மாணவரணியினர் முற்றுகையிட்டனர்.

இதேபோல் கடலூர் தெற்கு மாவட்ட த.வா.க.வினர் மாவட்டச் செயலர் மு.முடிவண்ணன் தலைமையில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட ஊர்வலமாகச் சென்றனர். இதில் மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், ஒன்றியச் செயலர்கள் கே.ஆர்.தமிழ், வாசு, சரவணன், ம.கஜேந்திரன், என்.எஸ்.டி.தில்லை, இ.கரிகாலன், கி.பரசுராமன், ஆண்டவர் செல்வம், கோ.முருகன், ச.கோபு, கே.பி.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஊர்வலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது, டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு தலைமையிலான போலீஸார் அவர்களை  தடுத்தனர். ரயில் மறியலுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தனர். இதையடுத்து த.வா.க.வினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 476 பேரை  போலீஸார் கைதுசெய்து, மாலையில் விடுவித்தனர்.

நெய்வேலியில் திருபுவனை சக்கரவர்த்தி தலைமையில் சுமார் 250 பேர் வட்டம் 19-ல் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மந்தாரக்குப்பத்தில் நகர செயலர் சக்திவேல் தலைமையில் சுமார் 250 பேர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிஞ்சிப்பாடியில் ஒன்றியச் செயலர் அய்யப்பன் தலைமையில் சுமார் 300 பேர் அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியையும், வடலூரில் மாவட்ட துணைச் செயலர் வெங்கடேசன் தலைமையில் 200 பேர் பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியையும், குள்ளஞ்சாவடியில் ஒன்றியத் தலைவர் பாலமுருகன் தலைமையில் 175 பேர் அங்குள்ள வங்கியையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பண்ருட்டியில் தவாக பொதுச் செயலர் காவேரி தலைமையில், நகர செயலர் ராஜமூர்த்தி, ஒன்றியச் செயலர்கள் சிவக்குமார், சுரேஷ், சுரேந்தர், ராஜகோபால் ஆகியோர் முன்னிலையில் ரயில் மறியலுக்கு முயன்ற 2,500 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

முத்தாண்டிக்குப்பத்தில் ஒன்றியச் செயலர் டி.சி.முருகன் தலைமையில் பேர்பெரியான்குப்பம் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 275 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மேற்கு மாவட்ட த.வா.க. செயலர் சின்னதுரை தலைமையில் 700-க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் ஊர்வலமாக விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது கட்சியினர் ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய மாவட்டச் செயலர் சின்னதுரை, போலீஸாரின் அனுமதியுடன் உள்ளே செல்லலாம் எனத்

தெரிவித்தார். திட்டக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாண்டியன் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார், போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்துக்குள் செல்ல முடியாதபடி தடுப்பு ஏற்படுத்தினர்.

அப்போது கட்சியினர் ரயில் நிலையம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்களில் சின்னதுரை உள்ளிட்ட 400 பேரை போலீஸார் கைது செய்தனர.;


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.