Show all

கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மும்பையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாநகர துணைக் கமிஷனர்

சமந்த்ரோகன் ராஜேந்திரா தலைமையிலான படை அழைத்து வந்தது. காலை 7.30 மணி அளவில் விமான நிலையத்தின் பின் பக்கமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மதுரை சுப்பரமணியபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, அங்கிருந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதால், அவர் இன்று மதுரை ஜெஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கேட்டு சுப்பிரமணியபுரம் போலீசார் மனு செய்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர் அட்டாக் பாண்டி. இவர் மீது மதுரை, அவனியாபுரம், கீரைத்துரை, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உள்பட பல காவல்நிலையங்களில் கொலை, மிரட்டல் மோசடி உள்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர், மும்பையில் திங்கள்கிழமை மராட்டிய மாநிலம் நவி மும்பையில் கைது செய்யப்பட்டார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ் கடந்த 2013 ஜனவரி 31ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என 17 பேர் சேர்க்கப்பட்டனர். சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்ட அவர் தலைமறைவானார். போலீசார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அட்டாக் பாண்டியை கைது செய்து அழைத்து வரப்பட்டதால் பதட்டமாக காணப்படுகிறது மதுரை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.