Show all

அத்திமரத் திருமால் அருட்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது! 47 நாட்களாக காஞ்சீபுர பெருமாள்கோயிலில் முன்னெடுக்கப் பட்டது.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சீபுர பெருமாள் கோயிலில் முன்னெடுக்கப் படும் அத்திமரத் திருமால் அருட்காட்சி திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் இத்திருவிழாவை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துக் கொண்டாடுவர்.

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நூற்றி எட்டு மாலியச்சமயக் கோவில்களில் ஒன்றான காஞ்சீபுரம் பெருமாள் கோவிலில் அத்திமரத்தால் செய்யப்பட்ட திருமாலை ஆனி மாதம் பதினாறாம் நாளிலிருந்து பற்றாளர்கள் கண்டு கொண்டாடி வருகிறார்கள். முதல் முப்பது நாட்கள் படுத்திருக்கும் கோலத்தில் காட்சி அளித்த அத்திமரத் திருமால், இன்று வரை நின்றகோலத்தில் அருட்காட்சி அளித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பற்றாளர்கள் அத்திமரத் திருமலைக் கண்டு கொண்டாடி வருகின்றனர்.


நேற்று அத்திமரத் திருமால் ஏலக்காய் மாலை, துளசி மாலை, பூ மாலை அணிவிக்கப்பட்டு பற்றாளர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

அத்திமரத் திருமால் அருட்காட்சியையொட்டி காஞ்சீபுரம் நகரமே பற்றாளர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. கடந்த 47 நாட்களாக நடைபெற்று வந்த அத்திமரத் திருமால் அருட்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

அத்திமரத் திருமால் அருட்காட்சி நிறைவுபெறுவதையடுத்து நாளை சிலை கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் வைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த அத்திமரத் திருமால் மீண்டும் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் எடுக்கப் பட்டு தற்போது போல மீண்டும் விழாக் கோலம் காணும் காஞ்சிபுரம் பெருமாள் கோயில்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,246.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.