Show all

நடந்தது எதிர்பார்த்தவாறே! வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துள்ளது. அதிக அளவில் பணம் கைப்பற்றபட்டதான காரணத்தை முன்வைக்கிறது. 
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மக்களவைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில்  தீபலட்சுமி, அமமுக சார்பில் பாண்டுரங்கன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், உள்ளிட்டோர் போட்டியிடும் நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சில ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும் துரைமுருகனுக்கு நெருங்கி உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, பைஞ்சுதை கிடங்கு ஆகியவற்றில் நடத்திய வருமான வரிச் சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சாலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் அதிகாரியின் அறிக்கை, வருமான வரித்துறை அறிக்கை, காவல்துறை வழக்குப் பதிவு உள்ளிட்ட அம்சங்களை வைத்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையின் முடிவில் தேர்தலை ரத்து செய்ய முடிவெடுத்து அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த நிலையில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிக்கு தகவல் அனுப்பியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,124.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.