Show all

சட்டப்பிரிவு 353(சி)யின்படி குற்றவாளிக்குத் தெரிந்த மொழியில்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண

நீதிபதி ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கியதால் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

 

 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவா உள்பட 16 பேர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட கூடுதல் செசன்சு நீதிமன்றம், கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ஆம்தேதி, 16 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

 

இந்தத் தீர்ப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, தண்டனை பெற்ற ஜீவாவின் உறவினரான சுகன்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

 

அதில்,

‘குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 353(சி)யின்படி குற்றவாளிக்குத் தெரிந்த மொழியில்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும். ஆனால், 16 பேருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி, தன்னுடைய தீர்ப்பை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். எனவே, இந்தத் தீர்ப்பை ரத்து செய்யவேண்டும்.

16 பேரும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

 

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில், ‘ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றம் தண்டனை வழங்கினால், அதை எதிர்த்து மேல்முறையீடுதான் செய்ய முடியுமே தவிர ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது.

 

மேலும் கீழ் நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணை அனைத்தையும் தமிழ் மொழியில்தான் நடத்தியுள்ளார். தண்டனை விவரங்களை குற்றவாளிகளிடம் கேட்டு, அவர்களது பதிலையும் தீர்ப்பில் தமிழில் பதிவு செய்துள்ளது.

 

மேலும் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 353(சி)-க்கு எதிராக தீர்ப்பு அளித்ததற்காக, அந்த தீர்ப்பையே செல்லாது என்று கூறமுடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.