Show all

மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காக்க வேண்டும்: உயர்அறங்கூற்றுமன்றம் மதுரைக்கிளை

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை 46.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது, மாணவ, மாணவிகளும் குடிக்கின்றனர். எனவே 21 அகவைக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை விதிக்க வேண்டும் என்று உயர்அறங்கூற்று மன்றம் மதுரை கிளையில் மனு பதிகை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்தாண்டில் ரூ.31,244 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. திருவிழாக் காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 36 விழுக்காடாகவும், தமிழகத்தில் 46.7 விழுக்காடாகவும் உள்ளது. மது அருந்துவோர் எண்ணிக்கை விகிதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோர்களால் விபத்துகள், உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது. இருப்பினும் மது விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் 21 அகவைக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க தடை விதிக்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விலைக்கு மது விற்றால் புகார் அளிக்கவும் உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விவரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும் உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் விற்பனை நேரத்தை பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு அறங்கூற்றுவர்கள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மதுக்கடைகளின் நேரத்தை மாற்ற உத்தரவிட வேண்டுமென கோரப்பட்டது. அப்போது அறங்;கூற்றுவர்கள், 24 மணிநேரமும் மது கிடைக்கும்போது, மதுக்கடைகளின் நேரத்தை மாற்றுவதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில், மது விற்பனையை முறைப்படுத்த பல விதிகள், அரசாணைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணையை அறங்கூற்றுவர்கள் மூன்று கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.

டாஸ்மாக் மது விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையின்போது அறங்கூற்றுவர்கள்: வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை நம்பக்கூடாது. வருவாயை உயர்த்த பல வழிகள் உள்ளன. கிராம அவைக் கூட்டங்களை நடத்தி மதுக்கடைகளை வேண்டாமென தீர்மானம் நிறைவேற்றலாம். மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காக்க வேண்டும், எனக் கூறி, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,056.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.