Show all

அமைச்சர் விஜயபாஸ்கரின் உறுதிமொழியை அடுத்து வழக்கு முடித்து வைப்பு! தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனப்பேரணி

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராமசாமி என்பவர் உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் பதிகை செய்த மனுவில், புதுக்கோட்டை இலுப்பூரில் மருத்துவ முகாமில் நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதில், 100க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் சென்று விழிப்புஉணர்வு கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டனர். பேரணியில் சென்ற பலரும் தலைக்கவசம் அணியவில்லை.

இதன் மூலம் மோட்டார் வாகனச் சட்டத்தையும், கட்டாய தலைக்கவசம் தொடர்பாக உயர் அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அமைச்சர் மீறியுள்ளார். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு அறங்கூற்றுவர்கள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு கொண்ட அமர்வு முன்பு வந்தபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் அணியமான வழக்கறிஞர், வாகனப் பேரணியில் தலைக்கவசம் அணியாமல் சென்றது யாதார்த்தமாக நடைபெற்ற நிகழ்வு. இதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

இதையேற்க மறுத்த அறங்கூற்றுவர்கள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமைச்சருக்கும் பொருந்தும். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் பிரமாணப் பத்திரம் பதிகை செய்ய வேண்டும். தவறினால் அறங்கூற்றுமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறி இன்றைய நாளுக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கு உயர் அறங்கூற்றுமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப் பத்திரம் பதிகை செய்தார். அதில், அவசரத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றுவிட்டேன். இனி அதுபோன்று நடக்காது என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து வழக்கை முடித்துவைத்து உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,036.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.